ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இதில் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் -நியூஸிலாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல அடிலைட்டில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது. உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த தொடர் தொடங்கும் முன்னர் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்திய அணி கருதப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் மோசமான தோல்வியை தழுவியுள்ளது. இதன் காரணமாக பலரும் இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர்.
இந்த தொடரில் இந்திய அணியின் தவறுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்த முன்னாள் இந்திய அணி ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்திய அணி நிர்வாகத்தின் மேல் மற்றொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், " 1983 உலகக் கோப்பையில் நாங்கள் விளையாடியபோது எங்களுக்கு ஒரு மேலாளர் இருந்தார். இது 1985-லும் தொடர்ந்தது. ஆனால் பின்னர் நிலைமை மாறியது. இப்போது வீரர்களை விட துணை ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.அவ்வளவு ஏன் 2011-ல் இந்திய அணி உலகக்கோப்பையை வெற்றி பெற்றபோதுகூட துணை ஊழியர்கள் அணியில் இல்லை.
இத்தனை பேர் இருந்தால் யாருடைய பேச்சை கேட்பது என்பதில் வீரர்கள் குழப்பமடைவர். அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கும் போது தனியாக பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் எதற்கு?. அணியில் இந்த துணை ஊழியர்களின் எண்ணிக்கையை வரும்காலத்தில் குறைக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.