ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி உலக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடர் தொடங்கும் முன்னர் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளே வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதிலும் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் என்னும் அந்தஸ்துடன் ஆஸ்திரேலிய அணி இந்த உலகக்கோப்பையில் களமிறங்கியது. இதன் காரணமாக அந்த அணிக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக குரூப் சுற்றோடு இந்த தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணி நடையை கட்டியது. ஆஸ்திரேலியா மட்டுமின்றி இந்தியா போன்ற நாடுகளும் கோப்பையை வெல்லாத காரணத்தால் அந்த நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா போன்றோரை ரசிகர்கள் விமர்சிக்கும் நிலையில், அதேபோல ஆஸ்திரேலியாவிலும் அந்த அணியின் மூத்த வீரர்களை அந்நாட்டு ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். மூத்த வீரர்கள் பேசாமல் ஓய்வை அறிவித்து விடலாம் என்ற அளவு அங்கு ரசிகர்கள் கடும் கடுப்பில் உள்ளனர்.
இதன் காரணமாக சில வீரர்கள் ஓய்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவின் மூத்தவீரர் டேவிட் வார்னர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். ஆனால் லிமிடெட் ஓவர்கள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவிக்காமல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், "அடுத்த வருட ஆஷஸ் தொடருக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளேன். அடுத்த டி20 உலகக் கோப்பை 2024-ல் நடைபெறும். அடுத்த வருடம் ஒருநாள் உலகக் கோப்பை. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய கடைசி 12 மாதங்களாக இருக்கும். எனக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட், டி20 மிகவும் பிடிக்கும். 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளேன்" என்று கூறியுள்ளார்.
36 வயதான டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய அணிக்காக 96 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். 2009 முதல் 138 ஒருநாள், 99 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.