தேனி பழைய அரசு மருத்துவமனை ரோட்டைச் சேர்ந்தவர் சினேகன்(14). 9-ம் வகுப்பு படிக்கும் இவர் சிறுவயது முதலே நீச்சலில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். சிறுவயதிலேயே பல சாதனைகளுக்கும் சொந்தமாகி இருக்கிறார்.
இரண்டு முறை இந்தியாவிலிருந்து பாக்ஜலசந்தி கடல் வழியாக இலங்கைக்கு நீந்திச்சென்று சாதனைபடைத்த அவர், அதன்பின்னர் பிரிட்டன் அருகில் உள்ள வடக்கு கால்வாய் கடலில் குளிர்ந்த நீரில் ஃப்ரீ ஸ்டைல் முறையில் நீந்தி சாதனை படைக்க முடிவெடுத்துள்ளார்.
வடக்கு கால்வாய் கடல் உலகின் அதிக குளிர் கொண்ட கடல்களில் ஒன்றாகும். இதனால் பயிற்சிக்காக வடக்கு அயர்லாந்து சென்ற மாணவர் 12 முதல் 15 டிகிரி வரை குளிர்ந்த கடலில் 10 நாள்கள் நீச்சல் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அதன்பின்னர் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி அந்நாட்டின் நீச்சல் பயிற்சியாளர்கள், மற்றும் இதர குழுவினரோடு வடக்கு அயர்லாந்தில் இருந்து ஸ்காட்லாந்து வரை 35 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை படைத்த சினேகனைப் பாராட்டி வடக்கு அயர்லாந்து அரசு சாதனை விருது வழங்கியுள்ளது.