கடந்த 5-ம் தேதி சீனாவின் சிச்சுவானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், நிலநடுக்கத்தால் 93 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்தது. மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தின் போது கான் யூ என்ற நீர்மின் நிலைய ஊழியர் மற்றும் மற்றொரு நபர் ஆகிய இருவர் மின்நிலையத்தில் சிக்கிக்கொண்டனர். இருவரும் உணவும், மொபைல் சிக்னல் இல்லாமலும் ஒரு நாள் முழுவதும் மின்நிலையத்திலேயே தங்கினர்.
பின்னர் அங்கிருந்து வெளியேற முயன்ற அவர்கள், 12 மைல்களுக்கு மேல் மலைகளுக்கு நடுவே நடந்து சென்றுள்ளனர். அப்போது கான் யூ தனது கண்ணாடியை இழந்ததால் அந்த பகுதியில் நடக்க முடியாமல் இருந்துள்ளார். பின்னர் கான் யூவுடன் இருந்த நபர் மீட்புப்படையை அழைத்து வருவதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.
அதன்படி மீட்பு படையினரை சந்தித்து அந்த நபர் கான் யூ இருந்த இடத்துக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் அந்த இடத்தில் கான் யூவின் தூக்கி எறியப்பட்ட ஆடைகள் மற்றும் கால்தடங்களை மட்டுமே இருந்துள்ளது. அதனால் அவர் இறந்திருக்கலாம் என மீட்புப்படையினர் கருதி அங்கிருந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் நடந்து 17 நாள்களுக்குப் பிறகு வேட்டையாடச் சென்ற உள்ளூர் விவசாயி ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் கான் யூ-வைக் கண்டிபிடித்திருக்கிறார். உடனே மீட்புக்குழுவுக்கு தகவல் அளித்த நிலையில் அவர்கள் வந்து அவரை மீட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.