முதல் 3 நாள்களும் எவ்வித குறையும் இல்லாமல் சென்றுகொண்டிருந்த இந்திய அணிகளின் செஸ் ஒலிம்பியாட் பயணத்தில் திங்கள்கிழமை சில தடங்கள்கள் ஏற்பட்டன. சென்னையில் நடந்துகொண்டிருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதல் மூன்று நாள்களும் இந்தியாவின் 6 அணிகளுமே வெற்றிகளைப் பதிவு செய்திருந்தன. அமெரிக்காவுக்கு அடுத்து ஓப்பன் பிரிவில் இரண்டாவது தரநிலையில் இருந்த இந்தியாவின் டாப் அணியால் பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் டிராவே செய்ய முடிந்தது. அந்தப் போட்டியில் விளையாடிய பி ஹரிகிருஷ்ணா, விதித் குஜராதி, அர்ஜுன் எரிகைசி, எஸ்.எல் நாராயணன் ஆகிய அனைவருமே தங்கள் போட்டிகளில் டிராவே சந்தித்தனர்.
ஜூல் மொசார்டுக்கு எதிரான போட்டியில் கருப்பு காய்களுடன் விளையாடினார் ஹரிகிருஷ்ணா. 16வது நகர்வில் இரு ராணிகளையும் வெட்டிக்கொள்ளும் நகர்வை ஹரிகிருஷ்ணா முன்னெடுத்து போட்டி வேகமாக நகர்வதற்கு வழிவகுத்தார். போட்டியின் இறுதி கட்டத்தில் மொசார்டுக்கு ஒரு சிப்பாய் அதிகமாக இருந்தது. இருந்தாலும் இரண்டு வீரர்களிடமும் வெற்றி பெறுவதற்குப் போதுமான காய்கள் இல்லாததால் போட்டி டிராவில் முடிந்தது.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் பிரதான அணியும் இதே முடிவை எதிர்நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. ஹங்கேரி அணிக்கு எதிரான போட்டியில் கொநேரு ஹம்பி, ஹரிகா துரோனோவாலி, ஆர் வைஷாலி மூவருமே தங்கள் போட்டிகளை டிரா செய்தனர். ஆனால் அந்த முடிவு கிடைக்காது என்பதை உறுதி செய்தார் தானியா சச்தேவ். ஹங்கேரி வீராங்கனை சோகா கால்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றியைப் பதிவு செய்தார் அவர். அதன்மூலம் 2.5 - 1.5 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் இந்திய A அணி இதுவரை விளையாடியிருக்கும் நான்கு போட்டிகளிலுமே வெற்றி பெற்றிருக்கிறது.
திராங் தான் ஹாங்குக்கு எதிரான தன்னுடைய போட்டியின் பெரும்பாலான பகுதி, கொநேரு ஹம்பி வெற்றி பெறுவது போலத்தான் இருந்தார். ஆனால் தன்னுடைய நிலையை அவரால் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அவர் டிரா செய்தது தானியா சச்தேவ் மீது நெருக்கடியை அதிகரித்தது. இருந்தாலும் எந்தக் காரணத்துக்காகவும் அவர் தன் ஆட்டத்தில் கவனத்தைத் தவறவில்லை. தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை சாதகமாக்கிக்கொண்டு இந்தியாவுக்கு தொடர்ச்சியான நான்காவது வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார் அவர்.
ஓப்பன் பிரிவில் இந்தியாவின் பலமான B அணி தங்கள் போட்டியில் வெற்றி பெற்று இந்த ஒலிம்பியாட் தொடரில் தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது அந்த அணி. ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் பலம் வாய்ந்த நார்வே அணியை 3-1 என வீழ்த்திய இத்தாலிக்கு எதிராக மோதியது இந்தியா. மிகவும் கடினமான போட்டியாக இது அமைந்தது. ஆர் பிரக்ஞானந்தா, ரௌனக் சாத்வானி ஆகியோர் தங்கள் போட்டிகளை டிரா செய்திருந்தாலும் டி குகேஷ் மற்றும் நிஹால் சரின் இருவரும் தங்கள் போட்டிகளில் வென்று இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.
குகேஷ், டேனியல் வொகாசுரோ இருவரும் மோதிய போட்டி ஆரம்ப கட்டத்தில் சமமாகவே சென்றுகொண்டிருந்தது. 19வது நகர்வில் தன்னுடைய மந்திரியை F6 பொசிஷனுக்கு வொகாசுரோ நகர்த்தியது குகேஷுக்கு சாதகமாக அமைந்தது. அதைப் பயன்படுத்திக்கொண்ட இந்த இளம் தமிழக வீரர் இந்தப் போட்டியை வென்றார். ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் உலகின் நம்பர் ஃ வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக டிரா செய்திருந்தார் வொகாசுரோ. அவருக்கு எதிராக வெற்றி பெற்றது குகேஷின் திறமையை வெளிக்காட்டுகிறது.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் இரண்டாவது அணி எஸ்தோனியாவை 2.5 -1-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இரண்டு பிரிவுகளிலுமே இந்தியாவின் C அணி தோல்வியடைந்தது. ஓப்பன் பிரிவில் நடந்த போட்டியில் 1.5 - 2.5 என ஸ்பெய்னிடம் தோல்வியடைந்தது இந்தியா. அதேபோல் பெண்கள் பிரிவில் ஜார்ஜியா அணியிடம் 1 - 3 என தோல்வியடைந்தது இந்தியா.