இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளரான இவர், தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் மணிக்கட்டு பந்துவீச்சாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஆப்-ஸ்பின் பந்துவீச்சாளரான இவர் தற்போது வரை இந்திய அணியில் நீடித்து வருகிறார்.
எட்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் களமிறங்கிய அஸ்வின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர்களான நிக்கோலஸ் பூரான் மற்றும் சிம்ரோன் ஹெட்மைர் ஆகிய இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
முக்கிய வீரர்கள் இருவரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் குறைந்த ஓவர் போட்டிகளிலும் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை தேர்வாளர்களுக்கு அஸ்வின் நிரூபித்துள்ளார்.
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வினை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், "வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது நல்ல முடிவு. இந்த போட்டியில் அஸ்வின் மிகச்சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி பூரன் மற்றும் ஆகிய இரு முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார். இது வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டது.
இடது கை பேட்ஸ்மேன்கள் நிச்சயம் அஸ்வினின் பந்து வீழ்ச்சிக்கு முன் மண்டியிடவேண்டும். இது தவிர பேட்டிங்கிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். முக்கியமான நேரத்தில் தினேஷ் கார்த்திக்குக்கு தேவையான சப்போட்டையும் அவர் கொடுத்தார்" எனக் கூறியுள்ளார்.