இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சமீப காலமாக மோசமான ஃபார்ம் காரணமாக தவித்து வருகிறார். தொடக்கத்தில் வெகு காலம் சதம் அடிக்காமல் இருந்து வந்தவர், இப்போது ஓரளவு ரன் சேர்க்கவே தடுமாறுகிறார். 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து சர்வதேச அளவில் கோலி சதம் அடிக்கவில்லை.
இந்த காலகட்டத்தில் சர்வதேச அரங்கில் மொத்தம் 78 இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கும் அவரால் அந்த மூன்று இலக்க ஸ்கோரை எட்டவே முடியவில்லை. ஆனால் தன் 100 சதவிகித உழைப்பைக் கொடுப்பதிலும், அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கு திரும்புவதிலும் தீர்க்கமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார் விராட் கோலி.
2018ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில், அப்போதைய கேப்டன் கோலி விளையாடவில்லை. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றதால் பல முன்னணி வீரர்களோடு சேர்ந்து அவரும் அந்தத் தொடரில் பங்கேற்காமல் ஓய்வெடுத்தார். அதனால் ரோஹித் ஷர்மாவின் தலைமையில் அந்தத் தொடரில் பங்கேற்றது இந்திய அணி.
பல முன்னணி வீரர்கள் இல்லாமலும் ஆதிக்கம் செலுத்தி அந்தக் கோப்பையைக் கைப்பற்றியது இந்திய அணி. ஆசிய கோப்பை வரலாற்றில் இரண்டு ஃபார்மட்களிலும் சேர்த்து இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்திருப்பவர் விராட் கோலி தான். இதுவரை இத் தொடரில் 14 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்திருப்பவர் 766 ரன்கள் குவித்திருக்கிறார்.
ஆகஸ்ட் 27ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் அடுத்த ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க தயாராக இருக்கிறார் கோலி. அதுமட்டுமல்லாமல் தன்னுடைய மிகச் சிறந்த செயல்பாட்டைக் கொடுத்து இந்திய அணி உலகக் கோப்பை வெல்லவும் உதவப்போவதாக உறுதியளித்திருக்கிறார் விராட். இந்த டி20 உலகக் கோப்பை தொடரானது அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்பிறகு சர்வதேச ஒருநாள் உலகக் கோப்பை தொடர் 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. "என்னுடைய முக்கிய இலக்கு இந்திய அணி ஆசிய கோப்பையையும், உலகக் கோப்பையையும் வெல்வதறகு உதவ வேண்டும் என்பது தான். நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். அதற்காக என்ன செய்யவும் நான் தயாராக இருக்கிறேன்" என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் விராட் கோலி.
தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளும், ஐந்து சர்வதேச டி20 போட்டிகளும் கொண்ட தொடரில் விளையாடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.
கோலியின் இந்த முடிவு பல முன்னணி வீரர்களாலும் விமர்சகர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சமீபகாலமாக தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கும் விராட் கோலி, இப்படியொரு சூழலில் ஓய்வு எடுத்திருக்ககூடாது என்றும் அவர் வெஸ்ட் இண்டீஸ் சென்றிருக்கவேண்டும் என்றும் பலரும் விமர்சித்திருக்கின்றனர். கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக கோலி விளையாடியிருந்தார். அந்த சுற்றுப் பயணம் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. டி20 தொடரில் 12 ரன்களும், ஒருநாள் தொடரில் 33 ரன்களுமே அவர் எடுத்திருந்தார்.