திருவண்ணாமலை மாவட்டம் மேல்கப்பலுாரைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவரின் 2 வயது ஆண் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது வட்ட வடிவிலான பட்டன் பேட்டரி ஒன்றை விழுந்து உள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் குழந்தையை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக எக்ஸ்-ரே எடுத்துள்ளனர்.
எக்ஸ்-ரே பரிசோதனை முடிவில் பேட்டரி குழந்தையின் உணவு குழாய் மற்றும் மூச்சுக்குழாய் இடையே, தொண்டையில் சிக்கியிருந்தது தெரியவந்துள்ளது. உடனே அதை ஆப்பரேஷன் இன்றி அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து, 'லாரிங்கோ ஸ்கோபி' முறையில், அறுவை சிகிச்சையின்றி பேட்டரியை அகற்றியுள்ளனர். இந்த சிகிச்சைக்கு பின்னர் குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.