முதல் இரண்டு போட்டிகளை மிக மோசமாக தோற்றிருந்த நிலையில், அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை வென்று ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது சன்ரைசர்ஸ். நேற்று நடந்த போட்டியில் இந்த சீசனில் இதுவரை தோல்வியையே சந்தித்திராத குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியிருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிகளுக்கு அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் சிறப்பாக பேட்டிங் ஆடுவது மிக முக்கிய காரணமாக இருக்கிறது. சென்னைக்கு எதிரான போட்டியில் 32 ரன்களை எடுத்திருந்தவர், குஜராத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் 57 ரன்களை அடித்திருந்தார்.
வில்லியம்சனின் இன்னிங்ஸ்கள் போட்டியை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தாலும், அவரின் ஸ்ட்ரைக் ரேட்டை முன் வைத்து சில விமர்ச்னங்களும் வைக்கப்படுகிறது. டி20 போட்டிகளில் வந்து டெஸ்ட் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார் கேலியும் கிண்டலும் கூட செய்யப்படுகிறார். இந்த விமர்சனங்களிலும் கேலிக்களிலும் அர்த்தம் இருக்கிறதா? உண்மையிலேயே வில்லியம்சனின் நிதானமான ஆட்டம் சன்ரைசர்ஸ் அணிக்கு உதவியாக இருக்கிறதா இல்லை தொல்லையாக இருக்கிறதா?
சன்ரைசர்ஸ் அணி முதல் இரண்டு போட்டிகளில் தோற்றிருந்தது இல்லையா? அந்த இரண்டு போட்டிகளிலுமே கூட சன்ரைசர்ஸ் அணி ஸ்கோரை சேஸ்தான் செய்திருந்தது. இரண்டு போட்டிகளிலுமே தோற்றிருந்தது. ராஜஸ்தானுக்கு எதிராக 9 விக்கெட்டுகள் லக்னோவிற்கு எதிராக 7 விக்கெட்டுகள் என அந்த இரண்டு போட்டியிலும் சேர்த்து சன்ரைசர்ஸ் அணி 16 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
மொத்தமுள்ள 20 விக்கெட்டுகளில் 16 விக்கெட்டுகளை இழந்திருக்கிறார்கள் எனில் பேட்டிங்கில் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறார்கள் என்றே அர்த்தம். அடுத்த இரண்டு போட்டிகளுக்கு வருவோம். இந்த இரண்டு போட்டிகளிலுமே சன்ரைசர்ஸ் சேஸிங்தான் செய்திருந்தது. ஆனால், இரண்டையுமே வென்றிருக்கிறது. சென்னைக்கு எதிராக 2 விக்கெட்டுகள் குஜராத்திற்கு எதிராக 2 விக்கெட்டுகள் என இரண்டு போட்டிகளில் மொத்தம் 4 விக்கெட்டுகளைத்தான் இழந்திருக்கிறார்கள்.
முதல் இரண்டு போட்டிகளுக்கும் அடுத்த இரண்டு போட்டிகளுக்கும் என்னதான் வித்தியாசம்? எப்படி முதல் இரண்டு போட்டிகளை விட அத்தனை குறைவாக விக்கெட்டுகளை இழந்து சரிவிலிருந்து மீண்டு சன்ரைசர்ஸ் இரண்டு போட்டிகளையும் வென்றது? வித்தியாசமாக அமைந்தது வில்லியம்சனின் பேட்டிங்.
முதல் இரண்டு போட்டிகளிலுமே பவர்ப்ளேக்குள்ளேயே சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை விட்டிருந்தது. ஓப்பனர்கள் வில்லியம்சன், அபிஷேக் இருவருமே பவர்ப்ளேக்குள்ளேயே வீழ்ந்திருந்தனர். தொடக்கம் நன்றாக அமையாமல் போனதால் அடுத்தடுத்த பேட்ஸ்மேன்களும் சோபிக்க முடியாமல் வேக வேகமாக விக்கெட்டுகளை விட்டு சன்ரைசர்ஸ் அணி தோல்வியை சந்தித்திருந்தது.
ஆக, சன்ரைசர்ஸ் அணி வெல்ல வேண்டுமெனில் நல்ல தொடக்கம் வேண்டும். விக்கெட்டுகளை அதிகம் விடாமல் நல்ல பார்ட்னர்ஷிப்களை உருவாக்க வேண்டும் என்கிற நெருக்கடி உருவானது. அதை நிகழ்த்திக்காட்ட எதோ ஒரு வீரர் ஆங்கர் இன்னிங்ஸ் ஆடி விக்கெட்டை காத்து பார்ட்னர்ஷிப்களை உருவாக்க வேண்டும். அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, பூரன், மார்க்ரம் என சன்ரைசர்ஸில் பேட்டிங் ஆர்டர் முழுக்க அதிரடி சூரர்களாகவே நிறைந்திருக்கின்றனர். இந்த சமயத்தில்தான் கேன் வில்லியம்சன் அந்த ஆங்கர் ரோலை எடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
பவர்ப்ளேயில் விக்கெட்டை விடாமல் நின்று பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் வேலைதான் வில்லியம்சனுடையது. பவர்ப்ளேயில் விக்கெட்டை விடக்கூடாது எனில், ஸ்விங் ஆகும் நியுபாலில் ரிஸ்க் எடுக்காமல் நின்று செட்டில் ஆகிவிட்டு அடுத்து அடிக்க தொடங்க வேண்டும். வில்லியம்சன் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.
குஜராத்திற்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி முதல் 4 ஓவர்களில் வெறும் 11 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அந்த முதல் 24 பந்துகளில் 14 பந்துகள் டாட் ஆகியிருந்தது. வில்லியம்சன் ரொம்பவே மெதுவாக ஆடியிருந்தார். ஆனால், அந்த தொடக்க ஓவர்களை கடந்து செட்டில் ஆன பிறகு சீராக ஸ்கோர் செய்ய தொடங்கினார். முதலில் 50 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தவர், பின்னர் 100 க்கு மேல் சென்று கடைசி சில பந்துகளில் 190 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருந்தார். அபிஷேக் சர்மாவுடன் 64 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். கடந்த போட்டியில் அதே அபிஷேக்குடன் 89 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். வில்லியம்சனின் ஆங்கர் இன்னிங்ஸை மையமாக சுற்றி மற்ற பேட்ஸ்மேன்கள் ஆடும்போது சன்ரைசர்ஸுக்கு தேவையான பார்ட்னர்ஷிப் கிடைக்கிறது. விக்கெட்டுகள் விழாமல் இருக்கிறது. சன்ரைசர்ஸும் வெல்கிறது. வில்லியம்சன் இவ்வளவு சௌகரியமாக ஆடுவதற்கு சன்ரைசர்ஸின் பௌலர்கள் எதிரணியை 150-160 ரன்களுக்குள் சுருட்டிவிடுவதும் முக்கிய காரணமாக இருக்கிறது.
ஆக, டி20 போட்டிகளில் 150-200 ஸ்ட்ரைக் ரேட் மட்டுமில்லை, சூழலை பொறுத்து ஆடப்படும் 80-120 ஸ்ட்ரைக் ரேட் இன்னிங்ஸ்களுமே வெற்றியை தேடித்தரும்!