சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 5 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை நாளை எதிர்கொள்கிறது. தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோற்றிருக்கும் சென்னை அணி இந்த போட்டியிலாவது தோல்வியிலிருந்து மீளுமா?
சென்னை அணியை பொறுத்தவரைக்கும் முதலில் இரண்டு இடங்களில் அந்த அணிக்கு பிரதான பிரச்சனை இருக்கிறது. முதலில் பேட்டிங் பவர்ப்ளே. பேட்டிங்கில் பவர்ப்ளேயில் சீராக ரன்களை எடுக்காமல் சென்னை அணியின் பேட்டர்கள் தடுமாறி வருகின்றனர். குறிப்பாக, ஓப்பனர்கள் கடுமையாக சொதப்புகின்றனர். மூன்று போட்டிகளுக்கு பிறகு அடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் நான்காவது போட்டியிலும் சொதப்பியிருக்கிறார். அவருடன் ஓப்பனிங் இறங்கும் உத்தப்பாவும் சீராக ஆடுவதில்லை. இதனால் பேட்டிங்கில் சென்னை அணிக்கு ஒரு நல்ல தொடக்க மொமண்டமே கிடைப்பதில்லை. அடுத்து வரும் பேட்டர்களாலும் ஓப்பனர்கள் ஏற்படுத்தும் இழப்பை ஈடுகட்டும் வகையில் அசாத்தியமாக ஆட முடிவதில்லை. எதோ சரிவிலிருந்து மீட்டு கௌரவமான ஸ்கோரை எட்ட வைக்கிறார்கள். ஆனால், போட்டிகளை வெல்ல அது மட்டுமே போதுமானதல்ல.
சென்னை கவனிக்க வேண்டிய இரண்டாவது இடம் பௌலிங் பவர்ப்ளே. நடந்திருக்கும் நான்கு போட்டிகளில் சென்னை அணி பவர்ப்ளேயில் எடுத்திருக்கும் விக்கெட்டுகளின் எண்ணிக்கை 2 மட்டுமே. அதிலும் ஒரு விக்கெட் ரன் அவுட் மூலம் வந்தது. ஆக, ஒரே ஒரு விக்கெட்டை மட்டும்தான் பௌலர் வீழ்த்தியிருக்கிறார். தொடக்க விக்கெட்டுகள் கிடைக்காததால் எதிரணி வீரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து சுலபமாக ரன்களை சேர்த்துவிடுகின்றனர்.
இந்த பவர்ப்ளே பிரச்சனையை தீர்ப்பதற்காகத்தான் ஒவ்வொரு போட்டியிலும் ப்ளேயிங் லெவனை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். நன்றாக ஆடிய ப்ரெட்டோரியஸை உட்கார வைத்துவிட்டு மஹீஸ் தீக்சனாவை உள்ளே கொண்டு வந்ததும் பவர்ப்ளேயை மனதில் வைத்துதான். ஆனால் அவராலும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. நாளைய போட்டியில் மஹீஸ் தீக்சனாவை வைத்தே ஆடுவார்களா அல்லது ப்ரெட்டோரியஸை மீண்டும் அழைத்து வருவார்களா? எனும் கேள்வி எழுந்திருக்கிறது. U19 உலகக்கோப்பை போட்டியில் நியுபாலில் நன்றாக வீசிய ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர் பென்ச்சில் இருக்கிறார். அவர் அணிக்குள் கொண்டு வரப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
பேட்டிங் பவர்ப்ளேயில் ரன்கள் இல்லை. பௌலிங் பவர்ப்ளேயில் விக்கெட்டுகள் இல்லை. இதெல்லாம் பிரச்சனையாக இருந்தாலும் இதை மட்டுமே காரணம் சொல்லி தப்பித்துவிட முடியாது. பல அணிகளிலும் மேட்ச்சை அப்படியே தலைகீழாக புரட்டிபோடும் வகையில் அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடும் வீரர்கள் இருக்கிறார்கள். சென்னையில் அப்படியான வீரர்கள் இல்லை. இருந்தாகும் அவர்கள் முன் வந்து ஒரு முனைப்போடு அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடுவதில்லை. இந்நிலை மாற வேண்டும். இந்த சீசனின் சுமாரான கேப்டன்களின் வரிசையில் ஜடேஜா முதன்மையாக இருக்கிறார். உத்வேகத்துடன் அவர் முன் வந்து மற்ற வீரர்களுக்கு உதாரணமாக அமையும் வகையில் ஆட வேண்டும்.
இப்போது சென்னை அணி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் இருக்கிறது. இன்னும் 10 போட்டிகள் சென்னை அணிக்கு மீதமிருக்கிறது. இந்த 10 போட்டிகளில் எட்டில் சென்னை வென்றாக வேண்டும். இதுவே கொஞ்சம் அசாத்தியமான டாஸ்க்தான். பெங்களூருவிற்கு எதிரான நாளைய போட்டியில் தோற்றால் அந்த அசாத்தியமான டாஸ்க் இன்னும் கடினமாகும். சென்னை அணியின் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பும் மறைய தொடங்கும். பிறகு, தங்களுக்காக இல்லாமல் மற்ற அணிகளின் வாய்ப்பை தட்டிப்பறிக்கும் ஸ்பாய்லர் ஆட்டத்தை மட்டுமே சென்னையால் ஆட முடியும். இந்த சீசனில் இன்னும் 20 போட்டிகள் கூட முடியவில்லை. அதற்குள் சென்னை மாதிரியான சாம்பியன் அணி இவ்வளவு தூரம் சொதப்பியதே பெருத்த ஏமாற்றம்தான். மீண்டெழ எதாவது பண்ணுங்க சி.எஸ்.கே!