விளையாட்டு

தொடர்ச்சியாக நான்காவது தோல்வி.. அதே தவறுகள்.. அதே சொதப்பல்கள் - இனியாவது திருந்துமா சென்னை அணி? #IPL2022

சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சென்னை அணி தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை எட்டியிருக்கிறது.

தொடர்ச்சியாக நான்காவது தோல்வி.. அதே தவறுகள்.. அதே சொதப்பல்கள் - இனியாவது திருந்துமா சென்னை அணி? #IPL2022
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சென்னை அணி தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை எட்டியிருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வரலாற்றிலேயே அந்த அணி இவ்வளவு மோசமாக ஒரு சீசனை தொடங்கியதே இல்லை. முதல் மூன்று போட்டிகளை சென்னை தோற்றிருந்தது. நான்காவதாக சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை வென்று வெற்றிப்பாதையில் பயணிக்கும் என ரசிகர்கள் நம்பினர். ஏனெனில், சன்ரைசர்ஸ் அணி சென்னையை விட படுமோசமாக ஆடியிருந்தது. முதல் இரண்டு போட்டிகளையும் தோற்றிருந்தது. பேட்டிங் பௌலிங் எல்லாமே வீக்காக இருந்தது. எப்படியும் சன்ரைசர்ஸை வென்றுவிடலாம் என்றே ரசிகர்கள் நம்பினர். ஆனால், அந்த பலவீனமான சன்ரைசர்ஸுக்கு எதிராக கூட சென்னை அணி தோற்று நிற்கிறது. சென்னைக்கு என்னதான் ஆச்சு?

நிகழ்ந்த தவறுகள் மீண்டும் மீண்டும் அப்படியே நிகழ்வது சென்னை அணிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தவறிக்கொண்டே இருக்கின்றனர். கடந்த மூன்று போட்டிகளில் எதிலெல்லாம் சொதப்பினார்களோ அதே விஷயங்களில்தான் மீண்டும் இன்று சொதப்பியிருந்தார்கள்.

சன்ரைசர்ஸுக்கு எதிரான இந்த இப்போட்டியில் சென்னை அணி முதலில் பேட் செய்திருந்தது. கடந்த 3 போட்டிகளில் சென்னை அணியின் ஓப்பனர்கள் சிறப்பாக செயல்படாதது சென்னைக்கு பிரச்சனையாக இருந்தது. குறிப்பாக, கடந்த சீசனில் ஆரஞ்சு தொப்பி வின்னரான ருத்துராஜ் கெய்க்வாட் சொற்ப ரன்களில் அவுட் ஆனது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. முதல் மூன்று போட்டிகளில் ருத்துராஜ் எப்போதுமே சுமாராகத்தான் ஆடுவார். அதன்பிறகு, பட்டையை கிளப்புவார். எனவே இந்த சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் ருத்துராஜ் மீண்டும் ஃபார்முக்கு வந்திவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ருத்துராஜ் இந்த போட்டியில் மீண்டும் சொதப்பவே செய்தார். 16 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ருத்துராஜ், தமிழக வீரரான நடராஜன் வீசிய முதல் பந்திலேயே அவுட் ஆனார். ருத்துராஜை அவரின் முதல் போட்டியில் அவுட் ஆக்குவதை விட நான்காவது போட்டியில் அவுட் ஆக்குவது ரொம்பவே கடினம். அதை தனது துல்லியமான யார்க்கர் மூலம் நடராஜ் செய்து காட்டியிருந்தார்.

தொடர்ச்சியாக நான்காவது தோல்வி.. அதே தவறுகள்.. அதே சொதப்பல்கள் - இனியாவது திருந்துமா சென்னை அணி? #IPL2022

இன்னொரு ஓப்பனரான ராபின் உத்தப்பாவும் 15 ரன்களில் இன்னொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரின் பந்தில் அவுட் ஆகியிருந்தார். பவர்ப்ளேயில் இரண்டே இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே வெளியில் இருக்கும் சூழலில் அவர்களிடம் பந்தை தேடிக்கொடுத்து கேட்ச் ஆகியிருந்தார்.

ஆக, கடந்த போட்டிகளைப் போன்றே இந்த போட்டியிலும் சென்னை அணியின் பவர்ப்ளே சொதப்பல்கள் தொடர்ந்தது.

மிடில் ஓவர்களில் மொயீன் அலி கொஞ்சம் நன்றாக ஆடியிருந்தார். ஒரு சில பவுண்டரி சிக்சர்களையும் அடித்திருந்தார். அவருக்கு உறுதுணையாக அம்பத்தி ராயுடு நின்று ஆடியிந்தார். கடைசிக்கட்டங்களில் கேப்டன் ஜடேஜாவும் நன்றாக ஆடியிந்தார். இதனால் தொடக்க சரிவுகளிலிருந்து மீண்டு சென்னை அணி ஓரளவுக்கு டீசண்ட்டாக 154 ரன்களை எட்டியிருந்தது.

சன்ரைசர்ஸுக்கு 155 ரன்கள் இலக்கு. சென்னை அணியை பொறுத்தவரைக்கும் பேட்டிங் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை விடுவது எப்படி பிரச்சனையாக இருக்கிறதோ அதேமாதிரி, பௌலிங் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை எடுக்காதது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. கடந்த 3 போட்டிகளில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே பவர்ப்ளேயில் எடுத்திருக்கின்றனர். ரன்களையும் எக்கச்சக்கமாக வாரிக்கொடுத்திருக்கின்றனர். இந்த போட்டியிலும் அந்த பிரச்சனை தொடர்ந்தது.

பௌலிங் பவர்ப்ளேயை மனதில் வைத்து மஹீஸ் தீக்சனாவை சென்னை அணி ப்ளேயிங் லெவனுக்குள் கொண்டு வந்திருந்தது. மஹீஸ் மிகவும் இளம் வீரர். ஆனால், ஆடியிருக்கும் ஒரு சில போட்டிகளிலேயே கவனம் ஈர்த்த ஸ்பின்னர். டி20 உலகக்கோப்பை போட்டியில் 5.5 எக்கானமியோடு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பவர்ப்ளேயிலும் நன்றாகவே வீசியிருந்தார். இவரின் பவர்ப்ளே பெர்ஃபார்மென்ஸை மனதில் வைத்துதான் கடந்த போட்டிகளில் நன்றாக ஆடிய ப்ரெட்டோரியஸை உட்கார வைத்து இவருக்கு வாய்ப்பு வழங்கபட்டது.

தொடர்ச்சியாக நான்காவது தோல்வி.. அதே தவறுகள்.. அதே சொதப்பல்கள் - இனியாவது திருந்துமா சென்னை அணி? #IPL2022

ஆனால், இதன்பிறகும் சென்னை அணியால் பவர்ப்ளேயில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. முகேஷ் சௌத்ரி, மஹீஸ் தீக்சனா, ஜோர்டன் என மூவர் வீசிய பவர்ப்ளே ஓவர்களில் ஒரு விக்கெட் கூட விழவில்லை. 41 ரன்களை வழங்கியிருந்தனர். கேன் வில்லியம்சன், அபிஷேக் சர்மா கூட்டணி நன்றாக செட் ஆகியிருந்தது.

வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதை போல ஆடினார். ஆனால், குறைவான டார்கெட்டை மனதில் வைத்து எந்த வித ரிஸ்க்கும் இல்லாமல் சீசனின் முதல் வெற்றியை பெற்றுவிட வேண்டும் என நினைத்ததால் வில்லியம்சன் அப்படி ஆடினார் என புரிந்துக்கொள்ளலாம். இன்னொரு பக்கம் அபிஷேக் சர்மாவும் நன்றாகவே ஆடினார். அரைசதத்தையும் கடந்தார். இந்த இருவரும் சேர்ந்தே 89 ரன்களை எடுத்துவிட்டனர். 155 ரன்களை சேஸ் செய்யும் போது தொடக்க விக்கெட்டுகளே விழாமல் 89 ரன்கள் சேர்க்கப்படுகிறதெனில் அங்கேயே போட்டி முடிந்துவிட்டது என்றுதான் அர்த்தம்.

இதன்பிறகு முகேஷ் சௌத்ரி, பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும் அவை காலம் கடந்து வந்தவையே. அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. 17.4 ஓவர்களிலேயே சன்ரைசர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பேட்டிங் பவர்ப்ளே ஆகட்டும், பௌலிங் பவர்ப்ளே ஆகட்டும் இரண்டிலுமே சொதப்புவது சென்னையின் வாடிக்கையாக இருக்கிறது. இந்த வழக்கம் மாறும் வரை சென்னை வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது.

banner

Related Stories

Related Stories