சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. முதல் போட்டியிலேயே சன்ரைசர்ஸ் அணி மோசமாக தோற்றதற்கான காரணம் என்ன?
பேட்டிங் ஆகட்டும் பௌலிங் ஆகட்டும் பவர்ப்ளேயில் சன்ரைசர்ஸ் வெளிக்காட்டிய அணுகுமுறையே அந்த அணிக்கு பிரச்சனையாக மாறியது. சன்ரைஸர் அணி முதலில் பந்துவீசியிருந்தது. பௌலிங்கின் போது முதல் 6 ஓவர் பவர்ப்ளேயில் 58 ரன்களை சன்ரைசர்ஸின் பௌலர்கள் வழங்கியிருந்தனர். ஆனால், ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தியிருக்கவில்லை. விக்கெட் விழுவதற்கான வாய்ப்புகள் இருந்தது. ஏன் விக்கெட் விழவும் செய்தது. ஆனால், அது நோ-பாலாக மாறி காலை வாரியது. புவனேஷ்வர் குமார் வீசிய அந்த முதல் ஓவரிலேயே பட்லர் அவுட் ஆன பந்து சரியான பந்தாக அமைந்திருந்தால் அங்கேயே சன்ரைசர்ஸுக்கு ஒரு பிடிப்பு கிடைத்திருக்கும். ராஜஸ்தான் அணியும் இவ்வளவு பெரிய ஸ்கோரை எட்டியிருக்காது. ஒரு நோ-பால் இல்லை. மொத்தம் 4 நோ-பால்களை பவர்ப்ளேயில் மட்டுமே வீசியிருந்தனர். புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக் ஏன் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தரே நோ-பால் வீசியிருந்தார்.
கேப்டன் கேன் வில்லியம்சனுமே இந்த பவர்ப்ளேயில் முடிவுகள் எடுப்பதில் கொஞ்சம் தடுமாறியிருந்தார். ராஜஸ்தானின் வெற்றிக்கு அவர்கள் பவர்ப்ளேயில் சிறப்பாக பந்துவீசியதே மிக முக்கிய காரணம். பவர்ப்ளேயில் மட்டுமே மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்கள். வெறும் 14 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார்கள். அங்கேயே சன்ரைசர்ஸின் தோல்வி உறுதியாகிவிட்டது.
இவ்வளவு பெரிய சேதாரத்தை விளைவிக்க சன்ரைசர்ஸ் அணி இரண்டு பௌலர்களை மட்டுமே பயன்படுத்தியது. பவர்ப்ளேயில் பிரசித் கிருஷ்ணாவும் ட்ரெண்ட் போல்டும் மட்டுமே பந்து வீசியிருந்தனர். இருவருமே கச்சிதமாக பேட்ஸ்மேன்களஒ செட் செய்து வீழ்த்தியிருந்தனர். ஆளுக்கு 3 ஓவர்களை வீசியதால் அவர்களால் பேட்ஸ்மேனை குட் லெந்தில் செட் செய்து வீழ்த்த முடிந்தது. செட் செய்வதற்கான நேரத்தையும் ஓவர்களையும் சாம்சன் தனது பௌலர்களுக்கு கொடுத்திருந்தார். ஆனால், வில்லியம்சன் அப்படி செய்யவில்லை.
பவர்ப்ளேயான முதல் 6 ஓவர்களில் மட்டும் 5 பௌலர்களை பயன்படுத்தியிருந்தார். புவனேஷ்வர் குமார் தவிர மற்ற பௌலர்களை ஒரே ஓவரோடு கட் செய்திருந்தார். ரன்களை வாரி வழங்கிய வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக் ஆகியோரை ஒரே ஓவரோடு கட் செய்ததை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், சிறப்பாக வீசி வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்திருந்த செஃப்பர்ட்டை ஒரே ஓவரோடு கட் செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பின்பு இந்த செஃப்பர்ட்தாம் ஏழாவது ஓவரில் மீண்டும் வந்து அணிக்கு தேவைப்பட்ட முதல் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்தார்.
பௌலிங்கில் பவர்ப்ளேயில் இப்படி சொதப்ப பேட்டிங்கில் இதைவிட மோசமாக சொதப்பியிருந்தனர். மேலே சொன்னதை போல பவர்ப்ளேயில் 14 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். மூன்றுமே பெரிய விக்கெட்டுகள். வில்லியம்சன் 2, ராகுல் திரிபாதி மற்றும் பூரன் ஆகியோர் டக் அவுட்டும் ஆகியிருந்தனர். கடந்த சீசன்களிலெல்லாம் சன்ரைசர்ஸுக்கு அதன் டாப் ஆர்டர்தான் பலமே. மிடில் ஆர்டர் அப்படியே சரிந்துவிழும். இந்த முறை அப்படியே நேரெதிர் தலைகீழாக நிகழ்கிறது.
இந்த பவர்ப்ளே விஷயத்தில் மட்டும் சன்ரைசர்ஸ் தெளிவாக இருந்திருந்தால் இவ்வளவு மோசமாக தோற்றிருக்காது.