விளையாட்டு

நட்டுவின் யார்க்கரும்.. வாஷியின் சிக்சர்களும்: தமிழக வீரர்களின் பெர்ஃபார்மென்ஸ் எப்படி?

சன்ரைசர்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது

நட்டுவின் யார்க்கரும்.. வாஷியின் சிக்சர்களும்: தமிழக வீரர்களின் பெர்ஃபார்மென்ஸ் எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஐ.பி.எல் இல் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் சார்பில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆடியிருந்தனர். ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில் அவர்கள் ஆடியிருக்கிறார்களா?

நடராஜனை பொறுத்தவரைக்கும் சன்ரைசர்ஸ் அணியின் மூலமே பெரிய அளவில் பிரபலமடைந்தார். 2020 சீசனில் அவர் வீசிய ஒவ்வொரு யார்க்கருமே பேசுபொருளாகியிருந்தது. அந்த ஐ.பி.எல் சீசன் முடிந்த உடனேயே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மட்களிலுமே இந்திய அணிக்கு அறிமுகமாகி அசத்தியிருந்தார். சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார். டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென காயமடைந்தார்.

இதனால் 2021 ஐ.பி.எல் சீசனின் முதல் பாதியை தவறவிட்டார். சில மாதங்கள் கிரிக்கெட் ஆடாமல் இருந்தார். காயம் காரணமாக உலகக்கோப்பை வாய்ப்பும் பறிபோனது. காயத்திலிருந்து மீண்டு இரண்டாம் பாதி ஐ.பி.எல் க்கு வந்தபோது கொரோனாவில் சிக்கிக் கொண்டார். இப்படியாக கடந்த சில மாதங்கள் நடராஜனுக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஏகப்பட்ட காயங்கள்..சறுக்கல்கள். அதிலிருந்தெல்லாம் மீண்டு மெது மெதுவாக உள்ளூர் போட்டிகளிலெல்லாம் ஆட ஆரம்பித்தே இந்த சீசனுக்கு வந்து சேர்ந்தார்.

நட்டுவின் யார்க்கரும்.. வாஷியின் சிக்சர்களும்: தமிழக வீரர்களின் பெர்ஃபார்மென்ஸ் எப்படி?

இன்னொரு பக்கம் வாஷிங்டன் சுந்தரும் காயம் காரணமாக கடந்த உலகக்கோப்பை வாய்ப்பை தவறவிட்டு அவரும் இப்போதுதான் மெது மெதுவாக கிரிக்கெட்டுக்கு திரும்பியிருக்கிறார். ஒரே சன்ரைசர்ஸ் அணியால் இருவரும் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தனர். சன்ரைசர்ஸ் நேற்று தனது முதல் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக ஆடியிருந்தது. இந்த போட்டியின் ப்ளேயிங் லெவனில் இந்த இருவருக்குமே இடம் கிடைத்திருந்தது.

சன்ரைசர்ஸ் அணியே முதலில் பந்து வீசியிருந்தது. முதல் 6 ஓவர் பவர்ப்ளேயில் வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு ஓவரும் நடராஜனுக்கு ஒரு ஓவரும் கிடைத்திருந்தது. இதில், வாஷிங்டன் சுந்தர் தனது முதல் ஓவரை ரொம்பவே சுமாராக வீசியிருந்தார். வழக்கமாக பெங்களூரு அணிக்கு பவர்ப்ளேயில் வீசும்போது ரொம்பவே கட்டுக்கோப்பான லைன் & லெந்த்தில் வீசி விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருப்பார்.

ஆனால், இங்கே பவர்ப்ளேயில் வீசிய இந்த முதல் ஓவரிலேயே 18 ரன்களை கொடுத்திருந்தார். பட்லர் & ஜெய்ஸ்வால் இருவருமே இந்த ஓவரில் சிக்சர்களை அடித்திருந்தனர். இந்த ஓவரில் ஒரு நோ-பாலையும் வீசி வாஷி மேலும் தடுமாறியிருந்தார். இந்த பவர்ப்ளே ஓவருக்கு பிறகு மிடில் ஓவர்களில் மேலும் 2 ஓவர்களை வாஷி வீசியிருந்தார். இந்த ஓவர்களிலும் அதிகமாகவே ரன்களை வழங்கியிருந்தார். ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் வாஷியை குறிவைத்து அடித்தார். 10 பந்துகளில் 26 ரன்களை அடித்து துவம்சம் செய்திருந்தார். 3 ஓவர்களை வீசியிருந்த வாஷிங்டன் சுந்தரின் எக்கானமி 15க்கும் அதிகமாக இருந்தது.

நட்டுவின் யார்க்கரும்.. வாஷியின் சிக்சர்களும்: தமிழக வீரர்களின் பெர்ஃபார்மென்ஸ் எப்படி?

நடராஜன் 4 ஓவர்களை வீசியிருந்தார். இந்த 4 ஓவர்களில் 2 ஓவர்கள் சிறப்பாகவும் 2 ஓவர்கள் சுமாராகவும் அமைந்திருந்தது. இதில், பவர்ப்ளேயில் ஒரு ஓவரை நடராஜன் வீசியிருந்தார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியை அளித்த போதும் 6 ரன்களை மட்டுமே நடராஜன் கொடுத்திருந்தார். மிடில் ஓவரில் ஒரு ஓவரில் 14 ரன்களை கொடுத்த நட்டு 18 வது ஓவரில் 18 ரன்களை கொடுத்திருந்தார். இந்த ஓவர்களிலெல்லாம் நட்டு தனது ட்ரேட்மார்க்கான யார்க்கர்களை பெரிதாக பயன்படுத்தவே இல்லை. கடைசி ஓவரிலேயயே யார்க்கர்களை வீசியிருந்தார். அதுவும் ஹெட்மயருக்கு மிகத்துல்லியமாக மிடில் ஸ்டம்புகள் தெறிக்கும் வகையில் ஒரு யார்க்கரை வீசியிருந்தார். இந்த கடைசி ஓவரில் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். ரன்களை கொடுத்திருந்தாலும் கடைசியில் தனது பிரம்மாஸ்திரமான யார்க்கரை இறக்கி விக்கெட்டை வீழ்த்தி நடராஜன் ஒரு கம்பேக்கை கொடுத்துவிட்டார்.

நடராஜனை போலவே வாஷியும் கம்பேக் கொடுத்தார். ஆனால், அது பௌலிங்கில் இல்லை, பேட்டிங்கில்! தோல்வி உறுதியாகிவிட்ட சூழலிலும் விட்டுக்கொடுக்காமல் மன உறுதியோடு நின்று வெளுத்து வாங்கினார். வெறும் 14 பந்துகளில் 40 ரன்களை அடித்திருந்தார். எய்டன் மார்க்ரமும் வாஷியும் 19 பந்துகளில் 50+ ரன்களை சேர்த்திருந்தனர். மிக மோசமான தோல்வியை சுமாரான தோல்வியாக மாற்றியதற்கு வாஷியின் இன்னிங்ஸ் முக்கிய காரணமாக இருந்தது.

இருவருமே இந்த போட்டியில் கலவையான பெர்ஃபார்மென்ஸ்களையே கொடுத்திருக்கின்றனர். ஆனாலும், நடராஜன் வீசிய அந்த ஒரு யார்க்கரும் வாஷிங்டன் சுந்தர் அடித்த சிக்சர்களும் இருவரும் இந்த சீசனை அவ்வளவு எளிதில் விட்டுவிடமாட்டார்கள் எனும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories