இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீச் இடையேயான முதல் டி20 போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அறிமுக வீரரான ரவி பிஷ்னோய்க்கு ஆட்டநாயகன் விருது கிடைத்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவே டாஸை வென்றிருந்தார். இரவில் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ரோஹித்தின் இந்த முடிவு சிறப்பானதாகவே அமைந்திருந்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்களை எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் இரண்டு வீரர்கள் மட்டுமே ஓரளவு சிரமம் அளித்திருந்தனர்.
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன் அரைசதத்தை அடித்திருந்தார். ஓப்பனரான கைல் மேயர்ஸ் பவர்ப்ளேயில் ஆட்டம் காண்பித்திருந்தார். பவர்ப்ளேயில் தீபக் சஹார், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் என இந்திய அணியின் மூன்று வேக/மிதவேக பந்துவீச்சாளர்களையும் கைல் மேயர்ஸ் பந்தாடினார். அனைத்து பந்துகளையும் லெக் சைடில் மடக்கி அடித்து பவுண்டரி அடிப்பதிலேயே குறியாக இருந்தார். இரண்டு ஸ்லீப், டீப் லெக்கில் இரண்டு ஃபீல்டர்கள் என ரோஹித் ஃபீல்ட் வைத்த போதும் கைல் மேயர்ஸை கட்டுபடுத்த முடியவில்லை. பவர்ப்ளே முடிந்த பிறகு ஸ்பின்னர்கள் அறிமுகமான பிறகே மேயர்ஸ் ஓய்ந்தார். சஹால் ஒரு கூக்ளியை வீசி மேயர்ஸஜ் தடுமாற செய்துவிட்டு அடுத்த பந்தை நேராக வீச அதை முட்டி போட்டு அடிக்க முயன்று lbw ஆகியிருப்பார். மேயர்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
வரிசையாக விக்கெட் விழுந்துக் கொண்டிருந்த சமயத்திலும் நிக்கோலஸ் பூரன் ஒரு முனையின் நின்று சிறப்பாக ஆடினார். ஏதுவான பந்துகளை மட்டும் பெரிய ஷாட்டுகளாக அடித்திருந்தார். 43 பந்துகளில் 61 ரன்களை எடுத்த பூரன் ஹர்சல் படேலின் பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் ஆகி அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 157-7 என்ற ஸ்கோரை எட்டியது. வெஸ்ட் இண்டீஸ் பெரிய ஸ்கோரை எடுக்காமல் இருந்ததற்கு அறிமுக வீரரான ரவி பிஷ்னோய் சிறப்பாக வீசியதும் ஒரு காரணமாக இருந்தது. அறிமுக போட்டி என்பதால் இவரை குறிவைத்து இவரின் 4 ஓவர்களை வெஸ்ட் இண்டீஸ் அட்டாக் செய்யும் வாய்ப்பிருந்தது. ஆனால், பிஷ்னோய் சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணிக்கு 158 ரன்கள் டார்கெட். ரோஹித் சர்மாவும் இஷான் கிஷனும் ஓப்பனர்களாக இறங்கினர். ரோஹித் சர்மா தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடினார். ஒடேன் ஸ்மித்தின் ஒரே ஓவரில் 2 சிக்சர்களையும் 2 பவுண்டரிக்களையும் அடித்து மிரட்டியிருந்தார். இதில் அவரின் ஆஸ்தான புல் ஷாட் சிக்சரும் அடக்கம். 19 பந்துகளில் 40 ரன்களை அடித்து அசத்தியிருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 210. ரஸ்டன் சேஸின் பந்தில் மீண்டும் ஒரு பெரிய ஷாட்டுக்கு முயன்று ரோஹித் சர்மா அவுட் ஆகியிருந்தார்.
இன்னொரு ஓப்பனரான இஷான் கிஷன் தொடக்கத்திலிருந்தே தடுமாறிக்கொண்டிருந்தார். 42 பந்துகளில் 35 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இவரும் சேஸின் பந்தில் லெக் சைடில் மடக்கி அடிக்க முற்பட்டு கேட்ச் ஆனார். போட்டிக்கு முன்பாக இஷான் கிஷன் தனக்கு ஓப்பனிங் இறங்குவதே விருப்பம் என கூறியிருந்தார். ஆனால், இப்படி சொதப்பினால் அடுத்தடுத்து காத்திருக்கும் வீரர்களும் வழி விட வேண்டி வரும். இஷான் கிஷனை தொடர்ந்து கோலி, பண்ட் இருவருமே அடுத்தடுத்து அவுட் ஆகினார்.
ரன்ரேட் அழுத்தம் இல்லையென்றாலும் விக்கெட் அழுத்தம் ஏற்பட்டிருந்தது. ஆனால், வெங்கடேஷ் ஐயரும் சூர்யகுமார் யாதவும் மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் போட்டியை சிறப்பாக முடித்துவைத்தனர். கார்டெல் வீசிய 17 வது ஓவரில் சூர்யகுமார் ஒரு பவுண்டரியும் சிக்சரும் அடிக்க, பேபியன் ஆலன் ஓவரில் வெங்கடேஷ் ஐயர் ஒரு சிக்சர் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்தார். சூர்யகுமார் யாதவ் 34 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 24 ரன்களிலும் நாட் அவுட்டாக இருந்தனர். இந்திய அணி இந்த போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஓடிஐ தொடரை முழுமையாக வென்ற நிலையில் டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கிறது.