ஐ.பி.எல் மெகா ஏலம் பெங்களூருவில் நடைப்பெற்று வருகிறது. முதல் நாள் நிகழ்வுகள் நடந்து முடிந்திருக்கிறது. முதல்நாளின் முடிவில் சென்னை அணி 6 வீரர்களை வாங்கியிருந்தது. சென்னை அணியிடம் இன்னும் 20.45 கோடி ரூபாய் மீதமிருக்கிறது. இந்த தொகையை வைத்து சென்னை அணி எந்த வீரர்களையெல்லாம் ஏலத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது?
சென்னை அணியை பொறுத்தவரைக்கும் தங்களது பழைய வீரர்களையே மீண்டும் எடுப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டியது. அதன்படி ராபின் உத்தப்பா, ப்ராவோ, அம்பத்தி ராயுடு, தீபக் சஹார், ஆசிஃப், துஷார் தேஷ்பாண்டே ஆகியோரை சென்னை அணி ஏலத்தில் எடுத்கிருந்தது. இந்த 6 வீரர்களில் 5 பேர் கடந்த சீசன் வரை சென்னை அணியில் ஆடியவர்கள். துஷார் தேஷ் பாண்டே கடந்த சீசனில் சென்னை அணிக்கு நெட் பௌலராக இருந்தவர்.
ஏற்கனவே சென்னை அணி தோனி, ஜடேஜா, மொயீன் அலி, ருத்துராஜ் என 4 வீரர்களை சென்னை அணி தக்க வைத்திருந்தது. இப்போது 6 வீரர்களை எடுத்திருப்பதால் சென்னை அணியிடம் 10 வீரர்கள் இருக்கிறார்கள். ஒரு அணி குறைந்தபட்சமாக 18 வீரர்களை எடுக்க வேண்டும்..ஆக சென்னை அணி மீதமிருக்கும் 20.45 கோடி ரூபாயை குறைந்தபட்சமாக 8 வீரர்களுக்கு செலவிட்டாக வேண்டும். சென்னை அணிக்கு எந்தெந்த வீரர்கள் தேவைப்படுகிறார்கள்..
சென்னை அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் ஒரு ஓப்பனராக இருக்கிறார். அவருடன் ஆட வேண்டிய பார்ட்னரை சென்னை சேர்ந்தெடுத்தாக வேண்டும். பெரும்பாலும் அது வெளிநாட்டு ஓப்பனராக இருப்பது சென்னை அணிக்கு பலமாக இருக்கும். ஹேடன், ஹஸ்ஸி, மெக்கல்லம், ஸ்மித், வாட்சன், டூப்ளெஸ்சிஸ் என இதற்கு சென்னை அணிக்காக ஆடிய பல வெளிநாட்டு ஓப்பனர்களும் சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்திருக்கின்றனர். முதல்நாள் ஏலத்தில் டூப்ளெஸ்சிஸ், டீகாக், வார்னர் ஆகியோரை எடுத்து ஓப்பனராக்க சென்னை முயன்றது. ஆனால், அவர்களுக்கான போட்டியில் சென்னை அணியால் வெல்ல முடியவில்லை. எனவே, இரண்டாம் நாள் ஏலத்தில் சென்னை அணி ஒரு வெளிநாட்டு ஓப்பனருக்கு அதிக முயற்சியை எடுக்க வேண்டும்.
அதேமாதிரி வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் ஒருவரும் சென்னை அணிக்கு தேவை. கடந்த சீசனில் சென்னை அணியின் வெற்றிக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹேசல்வுட் மிக முக்கிய காரணமாக இருந்தார். ஹேசல்வுட்டை முதல் நாள் ஏலத்தில் சென்னை எடுக்க தவறியிருந்தது. எனவே, வெளிநாட்டை சேர்ந்த வேறொரு வேகப்பந்து வீச்சாளரை சென்னை அணி எடுத்தே ஆக வேண்டும். அதேமாதிரி, ஒரு தரமான இந்திய ஸ்பின்னரையும் சென்னை அணி எடுத்தாக வேண்டும். இப்போது வரை சென்னை அணியில் ஜடேஜா, மொயீன் அலி என இரண்டு ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஒரு முழுநேர ஸ்பின்னர் சென்னை அணியின் தேவையாக இருக்கிறது.
சென்னை அணிக்காக தோனி தொடர்ந்து ஆடினாலும் அவரால் பழைய மாதிரியே ஃபினிஷராக ஆட முடிவதில்லை. அதனால் ஜடேஜாவுக்கு ஒத்துழைக்கும் வகையில் ஒரு ஃபினிஷர் தேவைப்படுகிறார். இந்த ரோலில் ஆட தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், ஷாரூக்கான் ஆகியோரை எடுக்க சென்னை அணி கடுமையாக முயன்றிருந்தது. ஆனால், அவர்கள் சிக்கவில்லை. இதனால் இரண்டாம் நாளில் ஒரு ஹார்ட் ஹிட்டிங் ஃபினிஷரும் சென்னை அணியின் குறியாக இருப்பார்.
20.45 கோடியில் இத்தனை பாக்ஸ்களையும் சென்னை அணியால் டிக் அடிக்க முடியுமா?