ஐ.பி.எல் 2022 மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நட்சத்திர வீரர்கள் விற்பனை நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் சுற்று ஏலம் தொடங்கியது.
முதல் சுற்றில் முதல் வீரராக ஷிகர் தவான் ஏலத்தில் விடப்பட்டார். ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இதுவரையிலான ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக ரூ.12.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. நியூசிலாந்து வீரர் ட்ரென்ட் பவுல்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஹர்சல் படேலை பெங்களூரு அணி ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் ஜேஸன் ஹோல்டரை லக்னோ அணி ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. நிதிஷ் ராணாவை கொல்கத்தா அணி கடும் போட்டிக்கு நடுவே ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
காகிசோ ரபாடாவை ரூ.9.25 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐ.பி.எல் விளையாட்டில் புதிதாக இணைந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவர் ரூ.6 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் மற்றொரு புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ரூ.6.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார் குயிண்டன் டி காக். இரண்டாம் சுற்றில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மணீஷ் பாண்டேவை ரூ.4.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ராபின் உத்தப்பாவை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோவை சி.எஸ்.கே ரூ.4.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு ஏலம் போகவில்லை. டேவிட் மில்லர், ஸ்டீவ் ஸ்மித், ஷகிப் அல் ஹசன் ஆகியோரையும் யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இந்நிலையில், ஐ.பி.எல் ஏலத்தை முன்னெடுத்து நடத்திய ஹியூ எட்மீடஸ் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் ஐ.பி.எல் ஏலத்தில் தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.