இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இந்திய அணியே முதலில் பேட் செய்து வருகிறது. தற்போதைய சூழலில் இந்திய அணி 167-5 என்ற நிலையில் இருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராக ஆடினாலும் கேப்டன் விராட் கோலி அட்டகாசமாக ஆடி அரைசதத்தை கடந்திருக்கிறார்.
இந்திய அணியின் ஓப்பனர்களான ராகுலும் மயங்க் அகர்வாலும் 12 மற்றும் 15 ரன்களில் ஒலிவியர் மற்றும் ரபாடாவின் பந்துகளில் அவுட் ஆகியிருந்தனர். கடந்த போட்டியிலிருந்தே தனது வழக்கத்தை மீறி கொஞ்சம் வேகமாக ஆடி வரும் புஜாரா 77 பந்துகளில் 43 ரன்களை அடித்து மார்கோ யான்செனின் பந்தில் அவுட் ஆகியிருந்தார். நம்பர் 5 இல் இறங்கிய ரஹானே வெறும் 9 ரன்களில் ரபாடாவின் பந்தில் அவுட் ஆனார். மற்ற விக்கெட்டுகள் வேகமாக வீழ்ந்தாலும் கேப்டன் விராட் கோலி சிறப்பாக ஆடி அரைசதத்தைக் கடந்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் விராட் கோலி காயம் காரணமாக ஆடியிருக்கவில்லை. அதனால், இந்த 2022 இல் கோலி ஆடும் முதல் போட்டியாக இந்தப் போட்டியே அமைந்தது. இந்த ஆண்டின் முதல் போட்டியிலேயே கோலி அரைசதம் அடித்து அசத்தியிருக்கிறார். கோலியின் இந்த இன்னிங்ஸை பொறுத்தவரைக்கும் வழக்கத்திற்கு மாறான நிதானத்தை அவர் கடைபிடித்திருந்தார். 158 பந்துகளிலேயே கோலி அரைசதத்தை கடந்திருந்தார். கோலியின் கரியரில் அவர் அடித்திருக்கும் 28 அரைசதங்களில் மிகவும் மெதுவாக அடிக்கப்பட்ட இரண்டாவது அரைசதம் இது.
கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சதமடிக்காமல் திணறி வந்தார். 71வது சதத்தை கோலி அடிக்க முடியாமல் திணறியதற்கு அவர் பந்துகளை லீவ் செய்யும் கலையில் தடுமாறியதும் மிக முக்கிய காரணமாக இருந்தது. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளுக்கு அவசரப்பட்டு பேட்டை விட்டு தொடர்ச்சியாக அவுட் ஆகிக்கொண்டே இருந்தார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் கூட இரண்டு இன்னிங்ஸிலுமே ரொம்பவே ஒயிடாக சென்ற பந்துக்கு பேட்டை விட்டு எட்ஜ் ஆகி கேட்ச் ஆகியிருப்பார்.
அணியின் பயிற்சியாளரான டிராவிட் வீரர்களுக்கு வழங்கும் முதல் அறிவுரையே செட்டில் ஆகும் வரை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை துரத்திச் செல்லாதீர்கள் என்பதே. ஆனால், இதை சரியாக உள்வாங்கிக் கொள்வதில் கோலி தடுமாறிக் கொண்டிருந்தார்.
ஆனால், இந்தப் போட்டியில் கோலி அந்த பந்துகளை லீவ் செய்யும் வித்தையை மிகுந்த பொறுமையோடு நிதானமாகச் செய்திருந்தார். கோலி சந்தித்திருந்த முதல் 50 பந்துகளில் மட்டும் 66% பந்துகளை லீவ் செய்திருந்தார். கோலியின் கரியரிலேயே இத்தனை சதவீத பந்துகளை அவர் எப்போதும் ஆடாமல் விட்டதில்லை. இந்த இன்னிங்ஸில் அத்தனை நிதானமாக மிகச்சிறப்பாக பந்துகளை லீவ் செய்திருந்தார். தேவையில்லாமல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பேட்டை விடுவதை கணிசமாக குறைத்திருந்தார். இதனாலயே 158 பந்துகளை எதிர்கொண்டு மெதுவாக அரைசதத்தை கடந்திருந்தார். இதே நிதானத்தை கடைபிடித்தால் இரண்டு ஆண்டுகளாக கோலிக்கு வசப்படாத சதம் இந்தப் போட்டியில் சாத்தியப்பட அதிக வாய்ப்பிருக்கிறது.