2007-ல் பிசிசிஐ துவங்கிய இந்த ஐபில் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தை குறிவைத்து நடத்தப்பட்டு வந்தது. இந்தியாவில் ஒரு கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படும் இந்த விளையாட்டு போட்டியில் பல நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களும் கலந்துக்கொள்வர். மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்படும் இந்த ஐபில் போட்டிகளுக்கு ஸ்பான்சர் உரிமைத்தை பெறுவதற்கும் பல முன்னணி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவும்.
முதல் ஐபில் போட்டி துவங்கியபோது DLF மற்றும் PEPSI ஆகிய நிறுவனங்கள் போட்டியின் ஸ்பான்சராக இருந்தனர். 9 ஆண்டுகள் ஐபில் போட்டிக்கான ஸ்பான்சராக இருந்துவந்த DLF 2016-ல் இருந்து விலகியது. இதனையடுத்து, சீனாவை சேர்ந்த செல்போன் நிறுவனமான விவோ டைட்டில் ஸ்பான்சராக இணைந்தது. இதற்காக அந்நிறுவனம் ஆண்டிற்கு ரூ. 440 கோடியை பிசிசிஐ-க்கு செலுத்தி வந்தது.
ஆனால், 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் எல்லையில் கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட எல்லை மோதலில் இந்தியாவை சேர்ந்த 20 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததால் அந்த ஆண்டிற்கான ஐபில் தொடருக்கு DREAM 11 நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரானது. 2021-ஆம் ஆண்டு மீண்டும் விவோ நிறுவனம் ஐபில் ஸ்பான்சர் உரிமத்தை பெற்றது.
தற்போது 2022-ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டிக்கான வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்த ஆண்டு டைட்டில் ஸ்பான்சராக இந்தியாவை சேர்ந்த பிரபல தொழில் குழுமமான டாடா தேர்வாகியுள்ளது. இதனை ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உறுதி செய்துள்ளார்.
இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றான டாடா ஐபில் போட்டிக்கு ஸ்பான்சராகிருப்பது போட்டிக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் மும்பையை சுற்றியுள்ள 3 ஸ்டேடியங்களில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.