விளையாட்டு

பறிபோகும் வாய்ப்பு?- ஜோகோவிச் வரலாற்று சிறப்புமிக்க Grand slam பட்டத்தை வெல்வதற்கு தடுப்பூசியால் சிக்கல்!

ஜோகோவிச் வரலாற்றுச் சிறப்புமிக்க 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு தள்ளிப்போகும் நிலையில் இருக்கிறது.

பறிபோகும் வாய்ப்பு?- ஜோகோவிச் வரலாற்று சிறப்புமிக்க Grand slam பட்டத்தை வெல்வதற்கு தடுப்பூசியால் சிக்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ஒரு தடுப்பூசியால் ஒரு கிராண்ட் ஸ்லாம் வாய்ப்பே பறிபோகும் சூழல் உருவாகியிருக்கிறது. அதுவும் நம்பர் 1 வீரர் நோவக் ஜோகோவிச் வரலாற்றுச் சிறப்புமிக்க 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு தள்ளிப்போகும் நிலையில் இருக்கிறது.

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரும் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவருமான நோவக் ஜோகோவிச் தடுப்பூசிகளில் நம்பிக்கை இல்லாதவர். இதை முன்பு பலமுறை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் அவர். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மொத்த உலகமும் மும்முரமாக இருந்தபோதும், அதை எடுத்துக்கொள்ளாமல் இருந்தார் ஜோகோவிச்.

அதேசமயம், கொரோனாவைக் கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை விதித்தது ஆஸ்திரேலியா. நாட்டுக்குள் வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓப்பனில் பங்குபெறுவது குறித்து பல நாள்களாக குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. ஜோகோவிச்சும் தான் தடுப்பூசி போட்டுக்கொண்டாரா இல்லையே என்பதை அதன்பிறகும் சொல்லாமலேயே தான் இருந்தார்.

இந்நிலையில் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓப்பனில் பங்கேற்பதற்கான விலக்கு அளிக்கப்பட்டதாக டென்னிஸ் ஆஸ்திரேலியா நிர்வாகம் அறிவித்தது. குறிப்பிட்ட சில மருத்துவர்களிடம் தேவையான சான்றிதழ்கள் பெற்றால் இத்தொடரில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இது உலக அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகின் நம்பர் 1 வீரர் என்பதால் அவருக்கு விலக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக விமர்சனம் எழுந்தது. ஜோகோவிச் மீது, ஆஸ்திரேலிய ஓப்பன் நிர்வாகம் மீது, ஏன் ஆஸ்திரேலிய அரசின் மீதே விமர்சனம் எழுந்தது.

ஜோகோவிச் பங்கேற்பார் என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில், அவர் விசாவை ரத்து செய்திருக்கிறது விக்டோரியா அரசாங்கம். ஆஸ்திரேலிய ஓப்பனில் பங்கேற்பதற்காக மெல்போர்ன் விமான நிலையத்தில் இறங்கியிருக்கிறார் ஜோகோவிச். அவரைப் பரிசோதித்த விசா அதிகாரிகள், விலக்கு கொடுக்கப்பட்டதால் எடுத்த விசா செல்லாது என்று அறிவித்துவிட்டனர். விசா பற்றி எடுக்கும் முடிவு அந்தந்த மாகாண அரசுகளுக்கு இருப்பதால், விக்டோரியா அரசு இந்த முடிவில் தீர்க்கமாக இருந்தது. அதனால், ஜோகோவிச் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த முடிவை எதிர்த்து ஜோகோவிச் அப்பீல் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதனால், ஆஸ்திரேலிய ஓப்பனைச் சுற்றி பெரும் சர்ச்சை எழுந்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories