இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்றைய நாளின் ஆட்டத்தில் இந்திய வீரர்களான ரஹானே, புஜாரா இருவருமே அரைசதத்தை கடந்திருந்தனர். நீண்ட நாட்களாக ஃபார்மிலேயே இல்லாத இருவரும் இந்த போட்டியில் சிறப்பாக ஆடியதில் அனைவருக்குமே மகிழ்ச்சி. ஆனால், அவர்கள் அணியில் இடத்தை தக்கவைத்துக் கொள்ள இதுமட்டும் போதுமா?
ரஹானே மற்றும் புஜாரா இருவருமே இந்திய அணியின் முக்கியமான சீனியர் வீரர்கள். இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் பலரும் வெளிநாட்டு மைதானங்களில் திணறிக்கொண்டிருந்த சமயத்தில் உள்ளூரை விட வெளிநாடுகளில் மிகச்சிறப்பாக ஆடி கவர்ந்தவர் ரஹானே. ஸ்பின்னர்களை விட வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு இந்தியாவின் மிடில் ஆர்டரில் பெரும் பங்களித்தவர். இன்னொரு பக்கம் புஜாரா டிராவிட் இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவரின் இடத்தை அப்படியே நிரப்பியவர். ஆனால், இந்த இருவருமே சமீபமாக ஃபார்மிலேயே இல்லாமல் திணறி வந்தனர்.
புஜாராவால் கடந்த மூன்று ஆண்டுகளாக சதம் அடிக்க முடியவில்லை. ரஹானேவால் சீராக தாக்கம் ஏற்படுத்தும் வகையிலான இன்னிங்ஸ்களை ஆட முடியவில்லை. இருவருமே கடுமையாகத் திணறி வந்தனர். ஆனால், இருவரும் சீனியர்கள் என்பதாலும் அவர்களின் பழைய ரெக்கார்ட் வலுவாக இருந்ததாலும் இருவருக்குமே அணியில் தொடர்ந்து இடம் கிடைத்தது. கேப்டன் கோலியும் தொடர்ந்து அவர்கள் ஃபார்ம் அவுட்டில் இருந்த போதும் ப்ளேயிங் லெவனில் இடம் கொடுத்தார்.
எத்தனையோ அரிய வாய்ப்புகளுக்கு பிறகும் இருவரும் நல்ல இன்னிங்ஸ்களை ஆடாமல் சொதப்பினர். இதனால் இந்த தென்னாப்பிரிக்க தொடரே இருவருக்குமான கடைசி வாய்ப்பாக இருக்கும் என கருதப்பட்டது. ரஹானே துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதெல்லாம் அதற்கான சமிக்ஞைதான். தங்களது கரியரை தீர்மானிக்கப்போகும் இந்த தென்னாப்பிரிக்க தொடரின் முதல் மூன்று இன்னிங்ஸ்களிலும் இருவரும் பெரிதாக சோபிக்கவில்லை. முதல் போட்டியில் ரஹானே கொஞ்சம் அதிரடியாக 48 ரன்களை சேர்த்திருந்தாலும் அது கவனம் ஈர்க்கும் வகையிலான அரைசதமாக மாறாதது பின்னடைவாக இருந்தது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. இதிலும், இருவரும் சொதப்பினால் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்ற சூழலே இருந்தது. பல முன்னாள் வீரர்களும் இதுதான் இவர்களுக்கான கடைசி வாய்ப்பாக இருக்க வேண்டும் என தங்களின் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த வாய்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த ரஹானேவும் புஜாராவும் நன்றாக ஆடி அரைசதம் அடித்திருக்கின்றனர். அதுவும் இந்திய அணி 44-2 என தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில் கூட்டணி அமைத்து இருவரும் சிறப்பாக ஆடியிருந்தனர். ரஹானே-புஜாரா இருவரும் ஒன்றாக இணைந்து 111 ரன்களுக்கு கூட்டணி அமைத்தனர். இது அணியை சரிவிலிருந்து மீட்டு கௌரவமான ஸ்கோரை எட்டுவதற்கும் காரணமாக அமைந்தது. இருவருமே அரைசதம் கடந்திருந்தனர். குறிப்பாக, வழக்கமாக மிகவும் மெதுவாக ஸ்கோர் செய்யும் வழக்கமுடைய புஜாரா இந்த இன்னிங்ஸில் 62 பந்துகளிலேயே அரைசதம் அடித்து ஆச்சர்யப்படுத்தினார். ரஹானேவும் வழக்கத்தை விட அட்டாக்கிங்காக ஆடி அரைசதத்தை எடுத்திருந்தார். கடைசியில் ரஹானே 78 பந்துகளில் 58 ரன்களையும் புஜாரா 86 பந்துகளில் 53 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முக்கியமான கட்டத்தில் தங்களது எதிர்காலமே கேள்விக்குறியாக இருந்த சமயத்தில் ரஹானேவும் புஜாராவும் நல்ல இன்னிங்ஸை ஆடியிருக்கின்றனர். ஆனால், அணியில் தங்கள் இடத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த இன்னிங்ஸ் மட்டுமே போதுமா? இந்த அரைசதங்கள் மட்டுமே அவர்களுக்கான எதிர்காலத்தை உறுதிசெய்துவிட்டதா?
இப்படியெல்லாம் கேட்டால் நிச்சயமாக இல்லை என்றே சொல்ல முடியும். ரஹானேவும் புஜாராவும் சரியாக ஸ்கோர் செய்யாமல் இருந்த கட்டத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் ரொம்பவே அதிகம். சமீபமாக இந்திய கிரிக்கெட்டில் ஃபார்ம் அவுட்டில் இருந்த யாருமே இத்தனை வாய்ப்புகளை பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே. வழக்கமாக, ஒரு வீரர் சரியாக ஆடவில்லையெனில் அவரை சீக்கிரமாகவே அப்புறப்படுத்திவிட்டு அடுத்த வீரருக்கு செல்வதே கோலியின் வழக்கம். அப்படிப்பட்ட கோலியுமே கூட இவர்களுக்கு கூடுதல் கரிசனம் காட்டினார். தொடர் வாய்ப்புகளை வழங்கினார்.
போதும் போதும் என வாய்ப்புகளை வழங்கி கோலியே அடுத்தக்கட்ட நகர்வுக்கு தயாரான சமயத்தில்தான் இவர்கள் இருவரும் இப்போது அரைசதத்தை அடித்திருக்கிறார்கள். இந்த ஒரு அரைசதத்தை வைத்துக் கொண்டு இனி அணியில் நிரந்தரமாக இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என நினைப்பதில் நியாயமில்லை. இதேமாதிரியான பெர்ஃபார்மென்ஸ்களை தொடர்ந்து சீராக அளிக்கும்பட்சத்திலேயே ரஹானே மற்றும் புஜாராவுக்கான இடம் அணியில் உறுதிசெய்யப்படும். அடுத்த போட்டியிலேயே மீண்டும் சொதப்பினால் கோலி மீண்டும் வாய்ப்புகளை கொடுப்பாரா என்பது சந்தேகமே.
கடந்த 2020 டிசம்பரில் மெல்பர்னில் பாக்ஸிங் டேவில் ரஹானே ஒரு நல்ல தாக்கம் ஏற்படுத்தும் வகையிலான இன்னிங்ஸை ஆடியிருந்தார். அதன்பிறகு, இப்போதுதான் ஒரு நல்ல இன்னிங்ஸை ஆடியிருக்கிறார். அந்த ஒரு மெல்பர்ன் சதத்தை வைத்துக் கொண்டு ஒரு வருடம் அணியில் இருந்துவிட்டார். அதேமாதிரி, இந்த அரைசதத்தை வைத்தே அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்துவிடும் என அவர் நினைத்தால் அது பொய்த்தே போகும்.ஏனெனில், வெளியே இளம் வீரர்கள் பலரும் இன்னமும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.