இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணியே முதலில் பேட் செய்திருந்தது. முதல் நாளின் முடிவில் இந்திய அணி 272-3 என்ற வலுவான நிலையில் இருக்கிறது. இந்திய அணியின் சார்பில் கே.எல்.ராகுல் ஒரு அட்டகாசமான சதத்தையும் மயங்க் அகர்வால் ஒரு அரைசதத்தையும் அடித்திருக்கின்றனர்.
பாக்ஸிங் டேவான நேற்று தென்னாப்பிரிக்காவின் சென்ச்சூரியனில் வைத்து இந்த போட்டி நடந்திருந்தது. இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியே டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். ரஹானேவிற்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. சர்ப்ரைஸாக ரஹானேவிற்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இது ஏறக்குறைய அவருக்கான கடைசி வாய்ப்பாகவே கருதப்பட்டது.
இந்திய அணியின் சார்பில் கே.எல்.ராகுலும் மயங்க் அகர்வாலும் ஓப்பனர்களாக களமிறங்கினர். தென்னாப்பிரிக்க மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பவுன்சர்களை எதிர்கொண்டு பேட்டிங் ஆடுவது அவ்வளவு எளிதான விஷயமில்லை. ஆனால், இந்த கூட்டணி அதை கச்சிதமாக செய்திருந்தது. இருவரும் முதல் செஷனில் விக்கெட்டே விடவில்லை. முதல் செஷனில் 28 ஓவர்களில் 83 ரன்களை எடுத்து இந்தியாவை நல்ல நிலைக்கு அழைத்து சென்றனர்.
இருவருமே ரொம்பவே பொறுமையாகவும் நிதானமாகவும் ஆடியிருந்தனர். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அதீத ஜாக்கிரதையுடன் எதிர்கொண்டிருந்தனர். மயங்க் அகர்வால் மட்டும் சில சமயங்களில் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஷாட் ஆடியிருந்தார். பெரும்பாலும் அறிமுக வீரரான மார்கோ ஜெனேசனின் பந்திலேயே அட்டாக்கிங் ஷாட்களை ஆடினார். முதல் செஷனில் கே.எல்.ராகுல் முழுக்க முழுக்க அமைதி காத்தார். மிகச்சிறப்பாக இருவரும் முதல் செஷனை ஆடி முடித்தனர்.
இரண்டாவது செஷன் தொடங்கியது. மயங்க் அகர்வால் அரைசதத்தை கடந்தார். இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்தது. இருவரும் தொடர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கையில் அரைசதம் கடந்திருந்த மயங்க் அகர்வால் லுங்கி இங்கிடியின் இன்கம்மிங் டெலிவரி ஒன்றை பேடில் வாங்கி lbw ஆகி வெளியேறினார். மயங்க் அகர்வால் அவுட் ஆன அடுத்த பந்திலேயே புஜாராவும் டக் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சியளித்தார். டிஃபன்ஸ் ஆடிய புஜாரா இன்சைட் எட்ஜ் ஆகி ஷார்ட் லெக்கிடம் கேட்ச் ஆனார்.
இதன்பிறகு, ராகுல்-கோலி இருவரும் கூட்டணி சேர்ந்தனர். ராகுல் தொடர்ந்து தன்னுடைய நிதானத்தை கடைப்பிடித்து மிகச்சிறப்பாக ஆடினார். பெரும்பாலான பந்துகளை லீவ் செய்து பாதுகாப்பாக ஆடினார். ஃபுல் லெந்தில் ஷாட் ஆடுவதற்கு வசதியாக வந்த பந்துகளை மட்டுமே ஆடி சதத்தையும் நெருங்கிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் விராட் கோலி ஸ்பின்னரான கேசவ் மகாராஜின் ஓவர்களில் பவுண்டரி அடித்து செட்டில் ஆகிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ரபாடாவின் பந்தில் பிசிறு தட்டாமல் ஒரு கவர் ட்ரைவ் அடித்து அசத்தியிருந்தார். கோலி நன்றாக செட்டில் ஆனாலும் நின்று பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. லுங்கி இங்கிடியின் ஓவரில் தொடர்ச்சியாக 7 டாட்களை ஆடிவிட்டு 8 வது பந்தில் ஒயிடாக சென்ற பந்தை துரத்தி ட்ரைவ் ஆட முயன்று எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார். இந்த பந்தை மிக எளிதாக ஆடாமக் தவிர்த்திருக்க முடியும். ஆனால், கோலி வம்படியாக அந்த பந்தை துரத்தி சென்று ஷாட் ஆட முயன்று அவுட் ஆனார். ரசிகர்கள் கோலியின் சதத்திற்கு இன்னும் காத்திருக்க வேண்டிய சூழலே உருவானது.
இடையில் கே.எல் ராகுல் மிகச்சிறப்பாக 218 பந்துகளில் சதத்தை நிறைவு செய்து அசத்தினார். கோலி அவுட் ஆன பிறகு ராகுலுடன் ரஹானே கூட்டணி சேர்ந்தார். ரஹானே சமீபகாலமாக பயங்கர சொதப்பலான இன்னிங்ஸ்களை ஆடி வந்தார். அணியில் அவருக்கான இடமே கேள்விக்குறியானது. இந்த டெஸ்ட் போட்டியில் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்பே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்றும் அனுமானிக்கப்பட்டது. இத்தனை அழுத்தங்களோடு களமிறங்கிய ரஹானே நேற்று சிறப்பாக ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார். அடித்திருக்கும் 40 ரன்களில் 32 ரன்கள் பவுண்டரிக்களால் மட்டுமே வந்தவை. ரன் கணக்கையே பவுண்டரியோடுதான் தொடங்கினார். முதல் 12 ரன்களும் பவுண்டரியிலேயே வந்திருந்தது. அட்டாக்கிங்காக மிகச்சிறப்பாக அத்தனை பௌலர்களையும் பவுண்டரி அடித்து அசத்தினார்.சதமடித்த ராகுல் உட்பட மற்ற பேட்ஸ்மேன்கள் திணறிய ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களையும் மிகச்சிறப்பாக எதிர்கொண்டிருந்தார். எப்போதும் முதல் 30 பந்துகளில் அதிக தவறுகளை செய்யும் ரஹானே நேற்று மிகவும் நேர்த்தியாக ஆடி அசத்தியிருந்தார்.
ராகுலின் சதம் மற்றும் ரஹானேவின் அசத்தலான கம்பேக் ஆகியவற்றோடு முதல் நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. இந்தியா 272-3 என்ற நிலையில் இருக்கிறது. இரண்டாம் நாளில் ரஹானே நின்று சதமடிப்பாரா? ராகுல் இரட்டை சதம் அடிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.