டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடந்து முடிந்திருக்கிறது. நியுசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை கையில் ஏந்தியிருக்கிறது.
துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் டாஸை வென்று சேஸிங்கை தேர்வு செய்தார். அங்கேயே ஆஸ்திரேலியாவிற்கு பாதி வெற்றி கிடைத்துவிட்டது.
நியுசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்கத்திலேயே ஹேசல்வுட்டின் ஓவரில் டேரில் மிட்செல் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனார். இதன்பிறகு, கேப்டன் கேன் வில்லியம்சனும் கப்திலும் கூட்டணி போட்டனர். இந்த கூட்டணி மெதுவாக நின்று செட்டில் ஆகி அதன்பிறகு அடித்து ஆடும் திட்டத்தோடு ஆடியது. இதனால் 10 ஓவர்கள் முடிவில் நியுசிலாந்து அணி 57-1 என்ற நிலையிலேயே இருந்தது. ஆனால், 11 வது ஓவரிலிருந்து நிலைமை மாற தொடங்கியது. கப்தில் ஏமாற்றமளிக்கும் வகையில் அவுட் ஆனாலும், கேன் வில்லியம்சன் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை வெளுத்தெடுத்தார். முதல் 19 பந்துகளில் 18 ரன்களை மட்டுமே வில்லியம்சன் எடுத்திருந்தார். ஆனால் அடுத்த 13 பந்துகளில் 33 ரன்களை எடுத்து அரைசதம் கடந்தார். மொத்தமாக 48 பந்துகளில் 85 ரன்களை அடித்து நியுசிலாந்து அணியை கரை சேர்த்தார். குறிப்பாக, ஸ்டார்க்கின் ஓவரில் 12 பந்துகளில் 39 ரன்களை எடுத்திருந்தார். வில்லியம்சனின் அதிரடியால் நியுசிலாந்து அணி 172 ரன்களை எட்டியது.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், ஸ்விங்கை சமாளிக்க முடியாமல் ஃபின்ச் போல்டின் பந்தில் சீக்கிரமே அவுட் ஆனார். ஆனால், இதன்பிறகு கூட்டணி சேர்ந்த வார்னரும் மார்ஸும் நியுசிலாந்தின் கையிலிருந்து ஆட்டத்தை மொத்தமாக மாற்றிவிட்டனர். வார்னர் அரைசதத்தை அடித்து அவுட் ஆனாலும் மிட்செல் மார்ஸ் 77 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்து அணியை வெற்றி பெற வைத்தார்.
மார்ஸுக்கு ஆட்டநாயகன் விருதும் வார்னருக்கு தொடர்நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்த வெற்றிக்கும் ஒரு பழைய வரலாறுக்கும் பெரிய தொடர்பு இருக்கிறது.
இதுவரை 5 முறை ஓடிஐ உலகக்கோப்பைகளை ஆஸி வென்றிருக்கிறது. முதல் முறையாக 1987 இல் உலகக்கோப்பையை வென்றது.
அந்த 87' உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி கடுமையாக திணறிக்கொண்டிருந்தது. வெற்றியை விட தோல்வி அதிகமாக இருந்தது. 1983-84 காலக்கட்டத்தில் க்ரேக் சேப்பலுக்கு பிறகு அணி ஆலன் பார்டரின் கையில் வந்த பிறகு செட்டாகாமல் சொதப்பிக் கொண்டே இருந்தது.
87' உலகக்கோப்பைக்குள் நுழையும் முன்னும் ஒரு நாள் போட்டிகளில் ஏகப்பட்ட தோல்விகள். 1975 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. அப்படிப்பட்ட அணியக் 87 இல் யாருமே ஒரு பொருட்டாக கூட கருதவில்லை. கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளின் பட்டியலில் ஆஸிக்கு இடமே இல்லை. முழுக்க முழுக்க அண்டர்டாகாக அந்த தொடருக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டி வரை முன்னேறி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றது.
We were a very unfancied side back in those days, but I knew the group we had would give it a red-hot go. I suppose it was beyond our wildest dreams that we’d actually win the thing, but it was a special time in our lives
- ஆலன் பார்டர் இப்படியாக அந்த உலகக்கோப்பையை நினைவு கூர்வார்.
அந்த உலகக்கோப்பையை இந்தியாவே நடத்தியிருந்தது. இறுதிப்போட்டி ஈடன்கார்டனில் நடந்திருந்தது.
இப்போது இந்த டி20 உலகக்கோப்பைக்கு வருவோம்.
இது ஆஸிக்கு முதல் டி20 உலகக்கோப்பை.
87 ஆஸி அணியை போல இந்த ஆஸி அணியின் மீதும் இந்த தொடருக்கு முன்னால் பெரிய எதிர்பார்ப்பில்லை.
தொடர்ச்சியாக 5 டி20 சீரிஸ்களில் தோற்றிருந்தார்கள். வயதான வீரர்களை கொண்டிருந்தது. முக்கிய வீரர்கள் ஃபார்ம் அவுட்டில் இருந்தார்கள். இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள்தான் கோப்பையை வெல்லும் என கருதப்பட்டது. ஆனால், 87 போலவே அண்டர்டாகாக உள்ளே வந்து தட்டுத்தடுமாறி நாக் அவுட்டுக்கு தகுதிப்பெற்று தங்களது முதல் டி20 உலகக்கோப்பையை ஆஸி வென்றிருக்கிறது.
இன்னொரு ஒற்றுமை இந்த உலகக்கோப்பையையும் இந்தியாவே நடத்தியிருக்கிறது.
மேலும், அந்த 1987 உலகக்கோப்பையில் ஜெஃப் மார்ஸ் ஆடியிருந்தார். இவர் மிட்செல் மார்ஸின் தந்தை ஆவார். தந்தையும் ஒரு உலகக்கோப்பையை வென்று கொடுத்துவிட்டார். மகனும் ஒரு உலகக்கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.
1987 வெற்றிக்கு பிறகு மீண்டும் நான்கு முறை ஓடிஐ உலகக்கோப்பையை ஆஸி வென்றது.
டி20 உலகக்கோப்பை வெற்றியை இங்கே தொடங்கியிருக்கிறார்கள். கைக்குள் அடங்கா எண்ணிக்கையில் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்கள்!