டி20 உலகக்கோப்பை போட்டி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கோப்பையை வெல்லப்போகும் அணியை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் நியுசிலாந்து அணியும் மோதவிருக்கின்றனர்.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரைக்கும் கிரிக்கெட் உலகையே கட்டி ஆண்ட அணியாகவும், ஓடிஐ உலகக்கோப்பையை 5 முறை வென்ற அணியாக இருந்தபோதிலும் டி20 உலகக்கோப்பையை மட்டும் அந்த அணி ஒரு முறை கூட வெல்லவில்லை. 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருக்கின்றனர். அதுவே அவர்களின் அதிகபட்ச சாதனை. இந்த முறை சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருக்கின்றனர். இந்த முறை கோப்பையை தவறவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
அதேமாதிரியே, நியுசிலாந்து அணியும் ஒரு முறை கூட டி20 உலகக்கோப்பையை வென்றதே இல்லை. இறுதிப்போட்டிக்கே இப்போதுதான் முதல் முறையாக தகுதிப்பெற்றிருக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் ஐ.சி.சி தொடர்களில் மிகச்சிறப்பாக செயல்பட்ட அணியாக நியுசிலாந்தே இருக்கிறது. 2019 ஓடிஐ உலகக்கோப்பையை ஐ.சி.சி யின் விதிமுறைகளால் நூலிழையில் கோட்டைவிட்டிருந்தனர். இந்த ஆண்டில் ஜுன் மாதம் நடைபெற்ற ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை வீழ்த்தி வென்றிருந்தனர். இப்போது டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியிருக்கின்றனர். ஒரே ஆண்டில் ஐ.சி.சி யின் இரண்டு கோப்பைகளை வென்ற சாதனையை படைக்க வேண்டும் என்ற முனைப்போடு நியுசிலாந்து களமிறங்குகிறது.
துபாய் மைதானத்தில் டாஸை வென்று சேஸ் செய்யும் அணிகளே பெரும்பாலான போட்டிகளை வென்றிருக்கின்றனர். எனவே இந்த போட்டியிலும் டாஸை வெல்லும் அணி 100% சேஸிங் முடிவையே எடுக்கும். டாஸை வெல்லும் அணிக்கு போட்டியை வெல்லும் வாய்ப்பு அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், முதலில் பேட் செய்யும் அணி 100% தோற்கும் என்றும் சொல்ல முடியாது. கிரிக்கெட்டிலும் எப்போதும் விதிவிலக்குகள் உண்டு. இந்த போட்டியே ஒரு விதிவிலக்காக கூட அமையலாம்.
இந்த தொடரில் இரண்டு அணிகளின் ட்ராக் ரெக்கார்டை எடுத்து பார்த்தால் இரண்டு அணிகளும் சம அளவிலேயே பெர்ஃபார்ம் செய்திருக்கின்றனர். சூப்பர் 12 சுற்றில் இரண்டு அணிகளுமே தலா 4 போட்டிகளில் வென்றிருக்கின்றனர். அரையிறுதியில் டேபிள் டாப்பர்களான இங்கிலாந்து, பாகிஸ்தான் இரண்டு அணிகளையும் வீழ்த்தியிருக்கின்றனர்.
இரண்டு அணிகளின் ப்ளேயிங் லெவனிலுமே பெரிதாக எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை. வார்னர், ஃபின்ச், மார்ஸ், ஸமித், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், வேட், கம்மின்ஸ், ஸ்டார்க், ஆடம் ஷம்பா, ஹேசல்வுட். இதுதான் ஆஸ்திரேலிய அணியின் ப்ளேயிங் லெவனாக இருக்கும். வெற்றிக்கூட்டணி என்பதால் இதில் மாற்றம் இருக்க வாய்ப்பே இல்லை. கூடுதலாக ஒரு பௌலர் வேண்டும் என்பதற்காக ஆஸ்டன் அகரை ப்ளேயிங் லெவனுக்குள் கொண்டு வர நினைக்கலாம். ஆனால், ஆஸ்டன் அகருக்காக மார்ஸை பென்ச்சில் உட்கார வைத்து ஆடிய ஒரே ஒரு போட்டியில்தான் ஆஸ்திரேலியா தோற்றிருக்கிறது என்பதால் அதற்கு வாய்ப்பே இல்லை.
இந்த ப்ளேயிங் லெவனில் பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் நீளமான லைன் அப் இருக்கிறது. பேட் கம்மின்ஸ் வரைக்குமே பேட்டிங் ஆடக்கூடிய வீரர்கள் இருக்கின்றனர். வார்னர், ஃபின்ச், மார்ஸ், ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் ஆகியோர் தங்களை நிரூபித்துவிட்டனர். நல்ல இன்னிங்ஸ்களை ஆடிவிட்டனர். மேக்ஸ்வெல்லும் ஸ்மித்தும் மட்டுமே இன்னும் சோபிக்காமல் இருக்கின்றனர். அவர்களும் சிறப்பாக செயல்பட்டால் இந்த லைன் அப் வலுவானதாக இருக்கும். பௌலிங்கில் ஆடம் ஷம்பா 12 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். எக்கானமி ரேட்டும் 6 க்கு கீழ் இருப்பதால் இன்றைய போட்டியிலும் மிரட்டுவார். ஸ்டார்க், ஹேசல்வுட் ஆகியோர் வேகத்தில் அசத்துவர்.
நியுசிலாந்தை பொறுத்தவரைக்கும் டேரில் மிட்செல், கப்தில், வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ், சீஃபெர்ட், நீஷம், சாண்ட்னர், சோதி, போல்ட், சவுத்தி, ஆடம் மில்னே. இதுதான் அவர்களுடைய ப்ளேயிங் லெவனாக இருக்கும். டெவான் கான்வே காயமுற்றதால் அவருக்கு பதில் டிம் சீஃபர்ட் மட்டும் மாற்றப்பட்டிருக்கிறார். மற்றப்படி கடந்த போட்டியில் ஆடிய அதே ப்ளேயிங் லெவனுடன் நியுசிலாந்து இறங்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. டேரில் மிட்செல், கப்தில், வில்லியம்சன் போன்றோர் பேட்டிங்கில் பெரிய பலமாக இருக்கின்றனர். ஜிம்மி நீஷம் பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே அசத்தி வருகிறார். ஆஸ்திரேலியா எப்படி கூடுதலான பேட்ஸ்மேன்களை வைத்திருக்கிறதோ அதேபோல நியுசிலாந்து கூடுதலான பௌலர்களை வைத்திருக்கிறது. உறுதியான 6 பௌலிங் ஆப்சன்கள் இருக்கிறது. லெக் ஸ்பின்னரான இஷ் சோதி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுக்கிறார். சவுத்தி, போல்ட் இருவரும் கூட்டணி போட்டு மிரட்டி வருகின்றனர்.
ஒட்டுமொத்தமாக இரண்டு அணிகளும் சமபலத்துடன் நேருக்கு நேர் நின்று சமர் செய்ய தயாராக இருக்கின்றன. டி20 உலகக்கோப்பையின் புதிய சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அந்த ஒரு வலுவான அணி எது என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.