டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. குறிப்பாக, ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான டேவிட் வார்னர் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அவருடைய அரைசதமே போட்டியை வெல்ல மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
துபாய் மைதானத்தில் ஸ்கோரை சேஸ் செய்திருந்த அணியே அதிக போட்டிகளில் வென்றிருப்பதால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஃபின்ச் டாஸை வென்று ஃபீல்டிங்கையே தேர்வு செய்தார். இலங்கை அணியில் காயம் காரணமாக கடந்த போட்டியில் ஆடாமல் இருந்த மஹீஸ் திக்ஷனா அணிக்கு திரும்பியிருந்தார்.
இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஓப்பனர்களில் ஒருவரான நிஷாங்கா சீக்கிரமே அவுட் ஆகியிருந்தாலும் இன்னொரு ஓப்பனரான குசால் பெராரா நின்று ஆடினார். நம்பர் 3 இல் களமிறங்கிய அசலங்கா அதிரடியாக ஆடினார். க்ரீஸுக்குள் வந்தவுடனேயே கம்மின்ஸ் ஓவரில் சந்தித்த முதல் இரண்டு பந்துகளையே பவுண்டரியாக்கினார். தொடர்ச்சியாக, அடித்து ஆடினார். அவருக்கு உறுதுணையாக குசால் பெராராவும் சிறப்பாக ஆடினார். இவர்களின் நல்ல பார்ட்னர்ஷிப்பால் ரன்ரேட் சீராக அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆனால், இவர்கள் அவுட் ஆன பிறகு இலங்கை அணி கொஞ்சம் தடுமாற தொடங்கியது. 10 வது ஓவரில் ஷம்பாவின் கூக்ளியில் 35 ரன்களில் அசலங்கா கேட்ச் ஆக, ஸ்டார்க் வீசிய அடுத்த ஓவரில் ஒரு வெறித்தனமான யார்க்கரில் பெராரா அவுட் ஆனார்.
ஸ்டார்க் வீசிய அந்த நேர்த்தியான யார்க்கர் நேற்றைய போட்டியின் ஹைலைட்டான விஷயமாக அமைந்தது. அந்த யார்க்கருக்கு முந்தைய பந்தில்தான் பெரரா ஒரு சிக்சர் அடித்திருப்பார். அடுத்த பந்தே ஸ்டார்க் ஒரு துல்லியமான யார்க்கரை இறக்க ஸ்டம்புகள் தெறித்தன. இந்த உலகக்கோப்பை தொடரின் சிறந்த பந்துகளில் ஒன்றாக அந்த பந்தை கமெண்டேட்டர்கள் வர்ணித்திருந்தனர். 170-180 வரை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணி இதன்பிறகு தடுமாறியது.
கடைசியில் பனுகா ராஜப்க்சே கொஞ்சம் அடிக்க இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்களை எடுத்தது. ராஜபக்சே 33 ரன்களை எடுத்திருந்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு டார்கெட் 155. வார்னர் மற்றும் ஃபின்ச் ஃபார்மில் இல்லாததால் ஆஸ்திரேலியாவை இலங்கை கொஞ்சம் ஆட்டிப்பார்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த போட்டியில் வார்னரும் ஃபின்ச்சும் மிகச்சிறப்பாக ஆடியிருந்தனர். பவர்ப்ளேயில் விக்கெட்டே விடவில்லை. அதுமட்டுமில்லாமல் அதிரடியிலும் வெளுத்திருந்தனர். 6 ஓவர்களில் 63 ரன்களை அடித்திருந்தனர். லகிரு குமாராவின் ஒரே ஓவரில் மட்டும் இருவரும் சேர்ந்து 20 ரன்களை அடித்திருந்தனர். பவர்ப்ளே முடிந்தபிறகு ஹசரங்கா வீசிய ஓவரில் ஒரு கூக்ளியில் ஸ்டம்பை பறிகொடுத்து 37 ரன்களில் ஃபின்ச் அவுட் ஆனார். ஆனால், வார்னர் நின்று தொடர்ச்சியாக சிறப்பாக ஆடினார்.
கடைசி சில மாதங்கள் வார்னருக்கு அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கவில்லை..ஃபார்ம் அவுட்டில் இருந்தார், சன்ரைசர்ஸ் அணியில் ஓரங்கட்டப்பட்டார். உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்திலும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஆனால், நேற்று 42 பந்துகளில் 65 ரன்களை அடித்து மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடினார். 65 ரன்களில் ஷனாகா வீசிய 15 வது ஓவரில் கேட்ச் ஆகி அவுட் ஆனார்.
பவர்ப்ளேயிலேயே வார்னர் ஒரு முறை எட்ஜ் ஆகியிருந்தார் அந்த கேட்ச் வாய்ப்பை கீப்பர் குசால் பெராரா ட்ராப் செய்தார். அது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. வார்னர் அவுட் ஆனாலும் 17 வது ஓவரிலேயே ஆஸ்திரேலியா எளிமையாக வென்றது.
ஆஸ்திரேலிய அணி தங்களது பேட்டிங்கின் போது 31 டாட்களை மட்டுமே ஆடியிருந்தது. ஆனால், இலங்கை அணி 47 டாட்களை ஆடியிருந்தது. இரண்டுக்கும் 16 பந்துகள் வித்தியாசம். ஆஸ்திரேலிய அணி 17 வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்திருந்தது. 18 பந்துகளை மீதம் வைத்திருந்தது. இப்போது பார்த்தால் இலங்கை அணி அதிகமாக ஆடிய அந்த 16 டாட் பந்துகள் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது புரியும். இலங்கை அணி டாட் பந்துகளை குறைத்திருந்தால் ஆட்டம் இன்னும் நெருக்கமாக சென்றிருக்கும்.