முரசொலி நாளேட்டின் இன்றைய (29.10.2021) தலையங்கம் வருமாறு:-
‘விளையாட்டை வினை ஆக்கிடாதே' என்பது பழமொழிகளில் ஒன்று. சிலர், விளையாட்டையே வினை ஆக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்!
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதைக் கூட மதவாத நோக்கத்தோடு மனம் பார்க்கத் தொடங்குமானால், வினை வேறு எங்கும் இல்லை! அவரவர் மனங்களில்தான் இருக்கிறது.
நடந்தது ஒரு போட்டி. அதுவும் விளையாட்டுப் போட்டி. அவ்வளவுதான். அந்த வெற்றி தோல்விக்கு எதற்காக மதச்சாயம் பூச வேண்டும்? டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குரூப்-2 இல் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதின. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியை முதன்முறையாக வெற்றி பெற்று வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது பாகிஸ்தான். அவ்வளவு தான். இதுவரை இந்திய அணியை வென்றது இல்லை பாகிஸ்தான் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சொல்லி வந்தார்கள். அப்படி இனி சொல்ல முடியாது. அடுத்த மாதமே இன்னொரு விளையாட்டில் பாகிஸ்தான் தோற்கடிக்கப்படலாம். மாறி மாறி இது நடக்கத்தான் போகிறது. இதில் வருத்தப்படவோ, நமது விளையாட்டு வீரர்களைக் கொச்சைப்படுத்தவோ, அவர்களைச் சந்தேகப்படவோ என்ன இருக்கிறது?
இந்தியா இதுவரை உலகக் கோப்பையில் ஒரு ஆட்டத்தில்கூட பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்பது உண்மைதான். அதற்கு விளையாட்டுக் காரணங்கள்தான் காரணமாக இருந்திருக்க முடியும். அதுபோலவே இன்றைய தோல்விக்கும் விளையாட்டுக் காரணங்கள் தான் இருந்திருக்க முடியுமே தவிர, இதற்கும் அரசியலுக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்? இதுவரை இந்தியாவும் - பாகிஸ்தானும் 13 முறை நேருக்கு நேராக மோதி உள்ளன. ஒரு முறைகூட பாகிஸ்தான் வென்றது இல்லை. இந்தியாவின் வெற்றியை விளையாட்டு வீரர்கள்தான் தீர்மானித்து இருப்பார்களே தவிர, மதம் தீர்மானிக்கவில்லை. வெற்றியை எல்லாம் விளையாட்டு வீரர்கள் தீர்மானிக்கும் போது, தோல்வியை மதம் எப்படி தீர்மானிக்கும்?
ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலோ, இங்கிலாந்திடம் தோற்றாலோ வராத மதவாதம், பாகிஸ்தானிடம் தோற்றால் மட்டும் ஏன் வருகிறது? இந்தப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று கங்கைக் கரையில் வழிபாடுகள் நடத்தப்பட்டதன் உள்பொருள் என்ன? எதற்காக இதனை விளையாட்டுப்போட்டியாக இல்லாமல், போராகக் கருதும் மனப்பான்மை பெருகுகிறது? போர்ச்சூழலை எதற்காகத் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்?
இதுவரை வெற்றியை மட்டுமே இந்தியாவுக்குப் பெற்றுத் தந்த கோலியும் மற்ற வீரர்களும் இப்போது, அவமானத்தின் சின்னமாக கொச்சைப்படுத்தப்படுவதன் பின்னணியைத்தான் சகிக்க முடியவில்லை. இந்தியாவின் முதன்மைப் பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மத அடையாளம் இப்போது தான் பலருக்கும் கண்ணுக்குத் தெரிகிறது. இந்தியராக அல்லாமல் இந்து அல்லாதவராக ஒருவரைப் பார்க்கும் மனதுகள் பெருகி வருவதுதான் இந்த தேசத்துக்கு ஆபத்தானது.
தேர்வில் வெற்றி பெற்றவன், ‘என் மகன்' என்று உச்சிமுகரப்படுவான். தோற்றதும், இல்லை என்று ஆகிவிடுமா என்ன? மனதைக் கூட எப்படி கூறு போடத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் இது! நாம் அடைந்த தோல்வியை, இயல்பாக எடுத்துக் கொண்டார்கள் இந்திய வீரர்கள். தோற்றவர்களுக்குத்தான் தெரியும் உண்மையான காரணம். எனவே, வென்ற பாகிஸ்தான் வீரர்களை களத்திலேயே கேப்டன் கோலி, ஆரத்தழுவி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பயிற்சியாளர் தோனி உள்ளிட்டவர்களும் பாகிஸ்தான் வீரர்களைப் பாராட்டினார்கள். இதுதான் பெருந்தன்மையின் வெளிப்பாடு. ஆனால் இதுவே கொச்சைப்படுத்தப்படுகிறது. முகம்மது ஷமி திடீரென்று ‘தேசத்துரோகி' ஆக்கப்படுகிறார்.
‘நாங்கள் முகம்மது ஷமியின் பக்கம் நிற்கிறோம்' என்று சொல்லி இருக்கிறார்கள் இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள். டெண்டுல்கர், சேவாக், ஹர்பஜன்சிங் உள்ளிட்டோரும் ‘தேசவிரோதிகள்' ஆகிவிடுவார்களா? இந்தியாவுக்கு வெற்றிக் கனியை எத்தனையோ முறை உலக அரங்கில் பறித்துத் தந்தவர்களாயிற்றே அவர்கள்!
“நாங்கள் இந்தியாவை ஆதரிக்கிறோம், இந்திய அணியில் ஆடும் எல்லோரையும் ஆதரிக்கிறோம்' என்று சச்சின் டெண்டுல்கர் சொல்லியதைப் போலச் சிலரால் சொல்ல முடியாமல் போவதற்கு என்ன காரணம்? உங்களது மதவாத அரசியலை நாடாளுமன்றம் தாண்டி விளையாட்டு மைதானங்களுக்குள் எதற்காக எடுத்து வருகிறீர்கள்? விளையாட்டின் மூலமாக மதவாதத்தைத் திணித்து அதனை அரசியல் அறுவடைக்கும் பயன்படுத்தப் பார்ப்பதுதான் உண்மையான காரணம்!
‘முகம்மது ஷமி ஒரு சேம்பியன். இந்திய அணியின் தொப்பியை அணியும் எவரும், தனது இதயத்தில் இந்தியாவைத்தான் சுமந்து இருப்பார். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் ஷமி' என்று சேவாக் சொல்வதன் பொருள் புரியவில்லை என்றால், விளையாட்டில் மட்டுமல்ல, இன்னும் பல்வேறு தோல்விகளையும் நாம் சந்திக்க வேண்டியவர்கள் ஆவோம்!
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் பட்டியலில் ஷமி முன்னிலையில் இருக்கிறார். அவரைச் சந்தேகப்படுபவர்களுக்குச் சொல்வதற்கு பழைய வரலாறு ஒன்று இருக்கிறது. பாகிஸ்தான் பிரிவினையை முதலிலேயே ஆதரித்தவர் வல்லபாய் படேல்தான் என்பதை மௌலானா அபுல் கலாம் ஆசாத் எழுதிய வரலாறு சொல்கிறது. தொடக்கத்தில் இருந்து இறுதிவரை எதிர்த்தவர் அபுல் கலாம் ஆசாத் தான்.
பிரிவினைக்கு ஒப்புதல் தராதீர்கள் என்று படேலிடம் போய் பேச்சுவார்த்தை நடத்தியவர் ஆசாத். தோல்வி அடைந்தார் ஆசாத். நேருவிடம் போய் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆசாத். ‘படேல் அளவுக்கு பிரிவினையை நேரு ஆதரிக்கவில்லை' என்று எழுதி இருக்கிறார் ஆசாத். அதன்பிறகு காந்தியிடம் சொல்லித் தடுக்கப் போனவர் ஆசாத். ‘முஸ்லீம் லீக்கை அரசியல் ரீதியாக அப்புறப்படுத்துவதற்காக இந்தியாவின் ஒரு பாகத்தை இழக்கக்கூட இவர்கள் தயாராகி விட்டார்கள்' என்று தனது வரலாற்று நூலில் ஆசாத் எழுதி இருக்கிறார். ‘இந்திய விடுதலை வெற்றி' என்ற நூலில் பிரிவினைக் காலக்காட்சிகளை ஆசாத் எழுதி இருப்பதைப் படியுங்கள்.
பிரிவினையை முதலில் ஒப்புக்கொண்ட படேலுக்கு ரூ.3000 கோடியில் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முகம்மது ஷமிக்கள் சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். விளையாட்டை வினை ஆக்க வேண்டாம். வினைகள் அனைத்தும் விளையாட்டுகள் ஆக்கப்படுமானால், காப்பாற்றும் வல்லமை யாருக்கும் கிடையாது!