T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆஃப்கன் அணியும் அறிவிக்கப்பட்டது.
தாலிபன்கலின் பிடியில் ஆஃப்கன் சிக்கியுள்ளதால், உலகக்கோப்பை T20 தொடரில் ஆஃப்கன் அணி விளையாடுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், தொடருக்கான வீரர்கள் பட்டியலை ஆஃப்கன் கிரிக்கெட் வாரியம் அண்மையில் வெளியிட்டது.
அணியின் கேப்டன் என்ற பொறுப்பில் இருக்கும் ரஷித் கானிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணி வீரர்களை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே, கேப்டன் என்ற முறையில் தன்னிடம் ஆலோசனை கேட்காமல் செயல்பட்டதையடுத்து, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், தேசத்திற்காக என்றுமே பெருமையாக நினைத்து விளையாடுவேன் எனவும் ரஷித் கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரஷித் கானின் பதவி விலகலை அடுத்து, அவருக்கு பதிலாக 36 வயதான ஆல் ரவுண்டர் முகமது நபி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முகமது நபி, இக்கட்டான சூழலில் தன்னை நம்பி கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது, T20 உலகக்கோப்பை தொடரில் தேசத்திற்காக சிறப்பாக செயல்படுவோம் எனவும் பதிவிட்டுள்ளார்.