விளையாட்டு

T20 உலகக்கோப்பை அணியில் நடராஜன் சேர்க்கப்படாததற்கு உண்மையான காரணம் என்ன? - இப்படியும் கூட நடக்குமா?

நடராஜன் தேர்வு செய்யப்படாததின் பின்னணி என்ன என்பது குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை.

T20 உலகக்கோப்பை அணியில் நடராஜன் சேர்க்கப்படாததற்கு உண்மையான காரணம் என்ன? - இப்படியும் கூட நடக்குமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லை. அதிகம் எதிர்பார்த்தோம். ஏமாற்றம்தான்.

ஆனால், இப்போது நடராஜன் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என உலக அரசியல் தொடங்கி உள்ளூர் அரசியல் வரை பலரும் கம்பி கட்டும் கதைகளை அளந்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அணியின் தேர்வுமுறையை கொஞ்சம் உற்றுநோக்கினால் நடராஜன் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதை உணர முடியும்.

நடராஜனுக்கு எமனாக அமைந்தது அவரின் காயமும், காயத்திற்கு பிறகான ஓய்வுகாலமும் மட்டுமே. ஏப்ரலில் நடந்த ஐ.பி.எல்-இன் முதல் பாதியில் ஒன்றிரண்டு போட்டியோடு காயம் காரணமாக நடராஜன் விலகிவிட்டார். அதன்பிறகு, முழுவதும் சிகிச்சை மற்றும் ஓய்வே. காயத்திலிருந்து மீண்டுவிட்டார். ஆனால், இப்போது வரை ஒரு போட்டியில் கூட ஆடவில்லை.

வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை காயம் மற்றும் அதன்பிறகான மீளுதல் அவர்களின் கரியரில் முக்கிய கட்டமாக இருக்கும். காயத்திற்கு முன்பு பெர்ஃபார்ம் செய்ததைப் போன்றே காயத்திற்கு பிறகும் பெர்ஃபார்ம் செய்வது சிரமம். மொத்தமாக ஸ்காரச்சிலிருந்து தொடங்குவதை போன்று காயத்திலிருந்து மீண்ட பிறகு புதிய டெக்னிக்களுடனும் அணுகுமுறைகளுடனும் வருவார்கள். அவை தொடக்கத்திலேயே பலனை கொடுத்திடாது. ட்ரையல் & எரர் ப்ராசஸ் நடக்கும். அதன்பிறகே தங்களுக்கான ரிதத்தை பிடிப்பார்கள்.

இந்த சில மாத ஓய்வுக்கு பிறகு நடராஜனும் தன்னுடைய அணுகுமுறையில் மாற்றங்களை செய்ய முயற்சிப்பார். ஆனால், அதை நேரடியாக உலகக்கோப்பையில் சென்று முயற்சித்து பார்க்க முடியுமா? காயத்திற்கு பிறகும் அவரால் ஓவருக்கு நான்கு யார்க்கர்களை நறுக்கென்று வீச முடியுமா? இந்த கேள்விக்கான விடையை உலகக்கோப்பை போட்டியின் போது தேடிக்கொண்டிருக்க முடியாது. இவைதான் நடராஜனின் தேர்வுக்கான பிரச்சனையாக இருந்திருக்கும். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில் களமிறங்கி கொஞ்சம் பெர்ஃபார்ம் செய்திருந்தால் நிச்சயமாக நடராஜனை பற்றி யோசித்திருப்பார்கள். ஏனெனில் அவர் காயத்திற்கு பிறகு தன்னை நிரூபித்துவிட்டார் என்கிற ஒரு நேர்மறையான விஷயம் அவருக்கு சாதகமாக இருந்திருக்கும்.

காயமும் காயத்திற்கு பிறகான நிரூபித்தல் இல்லாமையுமே நடராஜனுக்கு வில்லனாக அமைந்தது என்பதை வேறு சில தேர்வுகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

ஸ்ரேயாஸ் ஐயரை எடுத்துக் கொள்ளுங்கள். மிடில் ஆர்டரில் இந்தியாவின் பெரிய நம்பிக்கையாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்திய அணியின் வருங்கால கேப்டனுக்கான ரேஸிலும் கலந்துக்கொள்ளும் முனைப்புடையவர். அவர் உலகக்கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால், மெயின் அணியில் இல்லாமல் ரிசர்வ் ப்ளேயராக மட்டுமே வைக்கப்பட்டுள்ளார். இது அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயமாக இருந்தது. ஹர்ஷா போக்ளேவே இதை ஒரு கடினமான முடிவு என விமர்சித்துள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயரின் தேர்வில் பின்னடைவை ஏற்படுத்தியதும் காயமே. நடராஜன் காயமடைந்த அதே சமயத்தில்தான் ஸ்ரேயாஸ் ஐயரும் காயமடைந்தார். சிகிச்சை முடிந்து பெங்களூருவில் இருவரும் ஒன்றாகவே மீண்டெழுதலில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர். ஸ்ரேயாஸ் ஐயரும் காயத்திற்கு பிறகு இதுவரை ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. நடராஜனை போன்றே காயத்திற்கு பிறகு ஸ்ரேயாஸும் தன்னை நிரூபிக்கவில்லை. அதுதான் அவரை ரிசர்வ் ப்ளேயர் லிஸ்ட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

T20 உலகக்கோப்பை அணியில் நடராஜன் சேர்க்கப்படாததற்கு உண்மையான காரணம் என்ன? - இப்படியும் கூட நடக்குமா?

இன்னொரு தேர்வையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம். வாஷிங்டன் சுந்தர். சமீபமாக ஒயிட்பால் கிரிக்கெட்டில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரே இந்திய ஆஃப் ஸ்பின்னர். 100% அணியில் இடம்பெறும் வாய்ப்பிருந்தது. ஆனால், காயம் ஏற்படவே ஐ.பி.எல் லிலிருந்து விலகினார். ஐ.பி.எல் லிலிருந்து மட்டுமே விலகுவதாக அறிவித்தார். ஒரு மாதம் ஐ.பி.எல் நடந்து முடிவதற்கு முன்பே அவர் காயத்திலிருந்து மீளும் வாய்ப்பிருக்கிறது. (இங்கிலாந்து தொடர் தொடங்கும் முன்பே காயம் கண்டறியப்பட்டு நாடு திரும்பிவிட்டார்)

ஆனால், அவரையும் ரிஸ்க் எடுத்து அணிக்குள் கொண்டு வர பிசிசிஐ விரும்பவில்லை. அதனாலயே அஷ்வினுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நான்கு ஆண்டுகளாக அஷ்வின் இந்தியாவுக்கு ஒயிட்பால் கிரிக்கெட் ஆடவில்லையே என கேள்வி வரலாம்.

சரிதான்! மூன்று மாதங்களாக கிரிக்கெட் ஆடாத நடராஜனையே கறாராக ஒதுக்கும்போது அஷ்வினை ஏன் ஒதுக்கவில்லை?

காரணம், வேறு வழியில்லை. இப்போதைக்கு வாஷிங்டன் சுந்தருக்கு அடுத்து என யோசிக்கும்போது அஷ்வின் மட்டுமே ஒரு தரமான ஆஃப் ஸ்பின் வாய்ப்பாக தொடர்ந்து அணியோடு பயணித்துக் கொண்டிருக்கும் வீரராக இருக்கிறார். அதனாலயே அவர் டிக் அடிக்கப்பட்டிருக்கிறார்.

உலகக்கோப்பை மாதிரியான பெரிய தொடரில் ஆட இன்றைய தேதிக்கு 100% உடல் திறனோடு நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களை எடுக்கவே தேர்வுக்குழு விரும்பியிருக்கிறது. அதனாலயே நடராஜன் அணியில் இல்லை.

ஏ... ஒன்றிய அரசே... எனத் தொடங்கி செல்வராகவன் படத்தை டீகோட் செய்வதைப் போல நடராஜன் அணியில் இல்லாததை பிரித்து மேய்ந்து போஸ்ட்மார்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள்! எல்லாம் வெத்து கான்ஸிப்ரசிக்கள்!

ஒரு உலகக்கோப்பை ஆடாவிட்டால் நடராஜனின் கரியர் முடிந்துவிடும் என நினைத்தால் நம்மை விட முட்டாள் யாரும் இருக்கமாட்டார்கள்.

மொக்கையாக பெர்ஃபார்ம் செய்கிறார் என்பதற்காக அவர் நீக்கப்படவில்லை. 'காயம்' என்பது மட்டுமே அவர் நீக்கத்திற்கான காரணமாக இருக்கிறது.

ஒட்டுமொத்த அணியின் நம்பிக்கையையும் பெற்ற சூப்பர்ஸ்டாராக நடராஜன் இருக்கிறார். 2022, 2023 என அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகக்கோப்பைகள் வரிசையாக வருகிறது. சீராக பெர்ஃபார்ம் செய்யும்பட்சத்தில் அதிலெல்லாம் நட்டு நிச்சயம் இடம்பெறுவார்.

(இந்த உலகக்கோப்பையில் கூட ஆடுவதற்கு சிறிய வாய்ப்பு இருக்கிறது. அணி அறிவிக்கப்பட்டுவிட்டாலும் அக்டோபர் 10 வரை இந்த அணியில் மாற்றம் செய்ய ஐ.சி.சி அனுமதியளித்துள்ளது. சும்மா நேரப்போக்குக்கெல்லாம் அணியை கலைத்துப் போடமாட்டார்கள். ஆனால், இந்த அணியில் இருக்கும் வீரர்கள் யாருக்காவது காயங்கள் ஏற்படும்பட்சத்தில் வேறு எதாவது வீரரை உள்ளே கொண்டு வரும் வாய்ப்பிருக்கிறது. எதாவது பௌலர்களுக்கு காயம் ஏற்பட்டால் மாற்று வீரராக கூட நடராஜன் உள்ளே வரலாம். அக்டோபர் 10 வரை பொறுத்திருங்கள். நல்ல செய்தி வரலாம். ஏனெனில், நட்டுவின் ட்ராக் ரெக்கார்ட் அப்படி. ஆஸ்திரேலிய சீரிஸில் வருண் சக்கரவர்த்திதான் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் காயமுறவே அவருக்கு பதில் நடராஜன் களமிறங்கி சூப்பர் ஸ்டாராக இந்தியா திரும்பினார்)

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories