ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களைக் குவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் மட்டும் இந்திய வீரர்கள் நான்கு பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 18 வயதாகும் பிரவீன்குமார் 2.07 மீட்டர் உயரம் தாண்டி ஆசிய சாதனையும் படைத்துள்ளார். இவர் உத்தர பிரதேச மாவட்டம் நொய்டாவைச் சேர்ந்தவர். பிரவீன்குமாரின் இந்த வெற்றியின் மூலம் இந்தியாவிற்கு 11 பதக்கம் கிடைத்துள்ளது.
இந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 11 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் ஆகும். மேலும் பாராலிம்பிக் வரலாற்றிலேயே டோக்கியோவில்தான் இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
11 பதக்கங்களுடன் இந்தியா தரவரிசை பட்டியலில் 36வது இடத்தை பெற்றுள்ளது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டி முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படகு போட்டியில் இந்திய வீரர் ப்ராட்சி முன்னேறியுள்ளார். இதனால் அவர் ஏதாவது ஒரு பதக்கத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.