விளையாட்டு

ஆச்சர்யம் + அதிர்ச்சி... டோக்கியோவில் இந்தியாவின் இன்றைய நாள் எப்படியிருந்தது?

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்றைய நாள் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த நாளாகவே அமைந்துள்ளது.

ஆச்சர்யம் + அதிர்ச்சி... டோக்கியோவில் இந்தியாவின் இன்றைய நாள் எப்படியிருந்தது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டோக்கியோ ஒலிம்பிக்கின் மூன்றாவது நாளான இன்று அதிகாலையிலேயே வாள் வீச்சு சேபர் பிரிவு போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பவானி தேவி கலந்துக்கொண்டார். இவர் தமிழத்தை சேர்ந்தவர். இந்தியா சார்பில் வாள்வீச்சில் ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்ற முதல் நபர் என்கிற பெருமையை பெற்றிருந்தார்.

போட்டியில் ஆடுவதற்கு முன்பே வரலாறு படைத்துவிட்ட இவர், முதல் போட்டியிலேயே வென்று மேலும் அசத்தினார். துனிஷிய வீராங்கனைக்கு எதிரான முதல் போட்டியில் அவருக்கு இடமே கொடுக்காமல் 15-3 என்ற வகையில் மிகச்சிறப்பாக ஆதிக்கம் செலுத்தி போட்டியை வென்று ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கு தகுதிப்பெற்றார். அந்த சுற்றில் ஃபிரான்ஸ் வீராங்கனையிடம் தோற்று வெளியேறினார். இந்த தோல்வி ஏமாற்றமானதுதான் என்றாலும் பவானி தேவி இவ்வளவு தூரம் போராடியதே பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக டோக்கியோவில் இந்தியாவின் விடியல் சரியாகவே அமையவில்லை. காலையிலேயே அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தது. ஆனால், இன்று காலையிலேயே தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்றது. பவானி தேவியை தொடர்ந்து வில்வித்தையில் ஆண்களுக்கான அணிகள் பிரிவி போட்டி நடைபெற்றது.

உஸ்பெக்கிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியை சிறப்பாக வென்றது இந்திய அணி. கடைசி செட்டின் கடைசி வாய்ப்பில் 10 புள்ளிகள் பெற வேண்டிய நிலையில், இலக்கின் மையத்தை எந்த சிதறலும் இல்லாமல் துளைத்து 10 புள்ளிகளை பெற்று அணியையுன் வெற்றி பெற வைத்தார் அடானு தாஸ்.

ஆச்சர்யம் + அதிர்ச்சி... டோக்கியோவில் இந்தியாவின் இன்றைய நாள் எப்படியிருந்தது?

இதனை தொடர்ந்து நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரரான சரத்கமல் களமிறங்கினார். விட்டுக்கொடுக்காமல் விடாப்பிடியாக ஆடிய சரத் போர்ச்சுக்கல் வீரரான அபலோனியாவை வீழ்த்தி அசத்தினார்.

இந்த மூன்று வெற்றிகளுமே இந்தியாவிற்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருந்தது. ஆனால், இதன்பிறகு கொஞ்சம் சரிவு ஏற்பட்டது.

வில்வித்தை காலிறுதி சுற்றில் இந்திய அணி தென் கொரியாவிடம் தோற்று வெளியேறியது. ரேங்கிங் சுற்றில் இந்திய வீரர்கள் சுமாராக ஆடியதாலேயே காலிறுதியில் கொரியாவை சந்திக்க வேண்டிய நிலை வந்தது. வில்வித்தையில் யாராலும் அசைக்கமுடிய ஜாம்பவான்களாக இருக்கும் கொரியாவை தவிர்த்திருந்தால் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

மதியம் நடைபெற்ற பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் சுதிர்தா முகர்ஜியும் மனிகா பத்ராவும் தோல்வியை தழுவியிருந்தனர். மனிகா பத்ரா நேற்று தன்னை விட 43 இடங்கள் முன்னிலையிலிருந்த உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி அதிர்ச்சி அளித்திருந்தார். இன்றும் அதேமாதிரி செய்வார் என எதிர்பார்க்கையில் 17 ஆம் நிலையிலிருக்கும் வீராங்கனையிடம் தொடர்ந்து நான்கு செட்களை இழந்து வெளியேறினார். இவருடைய பயிற்சியாளர் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மைதானத்துக்கு வர முடியாத சூழல் இருந்தது. மற்ற அணி வீராங்கனைகள் பயிற்சியாளர்களுடன் ஆலோசித்துக் கொண்டே ஆட, மனிகா மட்டும் தனியாக ஆடினார். இதனால் அவர் இந்தளவுக்கு போராடியதே பாராட்டுக்குரியதுதான்.

ஆச்சர்யம் + அதிர்ச்சி... டோக்கியோவில் இந்தியாவின் இன்றைய நாள் எப்படியிருந்தது?

இதற்கிடையே நேற்றை பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி வென்றிருந்த மீராபாய் சானுக்கு தங்கப்பதக்கம் அளிக்கப்படலாம் என்கிற செய்தியும் பரவியது. முதலிடம் பெற்ற சீன வீராங்கனை ஊக்க மருந்து பயன்படுத்தியிருப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இறுதி முடிவு வெளியான பிறகு, சீன வீராங்கனை ஊக்க மருந்து எடுத்தது உறுதி செய்யப்பட்டால் மீரா பாய்க்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும்.

இப்படியாக ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த நாளாகவே இந்தியாவுக்கு இன்றைய நாள் அமைந்தது.

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories