டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக முதல் பதக்கத்தை வென்று அசத்தியிருக்கிறார் மீராபாய் சாய்கோம் சானு. பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இவர் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்திருக்கிறார்.
2000 ஆம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரி பளுதூக்குதலில் வெண்கலம் வென்றிருந்தார். அவருக்குப் பிறகு பதக்கம் வென்றிருக்கும் இரண்டாவது வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றிருக்கிறார்.
வெள்ளி வென்று அசத்திய மீராபாய்க்கு பாராட்டு மழை தொடர்ந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அரசியல் தலைவர்கள் முதல் சாமானிய மக்கள் அவரை அனைவரும் மீராபாயைப் பாராட்டி வருகிறார்கள்.
முன்னதாக, வெள்ளிப் பதக்கம் வென்ற தருணம் குறித்து மீராபாய் கூறுகையில், ‘நிஜமாகவே எனது கனவு நனவானது. இந்த பதக்கத்தை எனது நாட்டுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என தெரிவித்திருந்தார். மேலும் என்.டி.டி.வி பேட்டியின் போது, இந்த வெற்றிக்கு பிறகு முதலில் நான் பீட்ஸா சாப்பிட விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டோமினோஸ் நிறுவனம் மீராபாய் சானுவுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பீட்ஸா வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டோமினோஸ் நிறுவனம் தனது ட்விட்டரில், “மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள். அவர் மீண்டும் பீட்ஸா சாப்பிடுவதற்கு ‘காத்திருப்பதை’ நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. எனவே நாங்கள் டோமினோஸ் பீட்ஸாவை அவருக்கு வாழ்நாள் முழுவதும் தருகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.