விளையாட்டு

#Olympics2021 இந்தியாவுக்கு முதல் பதக்கம் - பளுதூக்குதலில் வெள்ளி வென்ற மிராபாய் யார் ?

வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை செய்திருக்கும் மீராபாய் சாய்கோம் சானு.

#Olympics2021 இந்தியாவுக்கு முதல் பதக்கம் - பளுதூக்குதலில் வெள்ளி வென்ற மிராபாய் யார் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று அசத்தியிருக்கிறார் மிராபாய் சாய்கோம் சானு. பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இவர் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவின் பெருமையாக உயர்ந்திருக்கிறார். ஸ்நாட்ச் பிரிவில் மூன்றில் இரண்டு வாய்ப்புகளில் கணகச்சிதமாக பளுவை தூக்கி அசத்தியிருந்தார்.

இரண்டாவதாக நடைபெறும் க்ளீன் & ஜெர்க் பிரிவிலும் முதல் இரண்டு வாய்ப்புகளில் மிகச்சிறப்பாக பளுவை தூக்கியிருந்தார். அசாத்திய முயற்சியாக கடைசி வாய்ப்பில் 117 கிலோவை தூக்க முயன்ற போதே தடுமாறினார்.

சீன வீராங்கனையான் வோஜி ஹோய் மட்டுமே அனைத்து வாய்ப்புகளிலும் எடைப்பளுவை சரியாக தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரி பளுதூக்குதலில் வெண்கலம் வென்றிருந்தார். அவருக்கு பிறகு பதக்கம் வென்றிருக்கும் இரண்டாவது வீராங்கனை எனும் பெருமையை பெற்றிருக்கிறார்.

கர்ணம் மல்லேஸ்வரி, சாய்னா நேவால், மேரிகோம், சாக்ஸி மாலிக், பி.வி.சிந்து வரிசையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையென்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

மணிப்பூரின் இம்பாலை சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்தவர் மிராபாய். சிறுவயதில் வீட்டிற்கு விறகுகளை வெட்டி சுமந்ததன் பின்னணியிலேயே பளுதூக்கும் பயிற்சிகளுக்கு சென்றிருக்கிறார்.

#Olympics2021 இந்தியாவுக்கு முதல் பதக்கம் - பளுதூக்குதலில் வெள்ளி வென்ற மிராபாய் யார் ?

ஜுனியர் லெவல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இவர் 2016 ரியோ ஒலிம்பிக்கிலும் பங்கேற்றிருந்தார். ஆனால், அதில் ரொம்பவே சுமாராக ஆடி சொதப்பியிருந்தார். க்ளீன் & ஜெர்க் பிரிவில் அவரால் எடைப்பளுவை முழுமையாக தூக்கவே முடியவில்லை. மூன்று வாய்ப்புகளிலுமே இயலாமல் தலைகுனிந்து வெளியேறியிருந்தார்.

5 வருடம் கடுமையான அசாத்திய உழைப்புக்கு பிறகு உலகின் நம்பர் 1 வீராங்கனையாக உயர்ந்தார். தலைகுனிந்து வெளியேறிய அதே ஒலிம்பிக் மேடையில், இன்று இந்தியாவின் பெருமையாக உயர்ந்திருக்கிறார்.

முதல் நாளிலேயே மீராபாய் பதக்கம் வென்றிருப்பது இந்தியாவின் மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கமாக இருக்கும். இதன்மூலம் அவர்களும் உத்வேகத்துடன் போட்டியிட்டு பதக்கங்களை குவிக்க முடியும். இந்தியாவின் இலக்கான இரட்டை இலக்க பதக்க லட்சியத்திற்கான தொடக்கமாக அமைந்திருக்கிறார் மீராபாய்.

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories