டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று அதிகாலை பெண்களுக்கான துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. 10மீ ஏர் பிஸ்டல் பிரிவான இதில் இந்தியா சார்பில் மனு பாகரும், யாஷஸ்வினி தேஷ்வாலும் பங்கேற்றிருந்தனர்.
உலகளவிலான தரவரிசையில் யாஷஸ்வினி முதல் இடத்தையும் மனு பாகர் இரண்டாம் இடத்தையும் வகிக்கிறார். இதற்கு முன் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் மற்ற நாட்டு வீராங்கனைகளை விட இவர்கள் இருவருக்குமே பெரிய போட்டி இருக்கும். சமீபத்தில் நடைபெற்ற டெல்லி உலகக்கோப்பையில் கூட இவர்கள் இருவருமே இறுதிப்போட்டியில் கடுமையாக மோதியிருந்தனர். இதில் யாஷஸ்வின் தங்கமும் மனு வெள்ளியும் வென்றிருந்தார். இதனால், ஒலிம்பிக்கிலும் இந்தியா சார்பில் இவர்கள் இருவருமே பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு டோக்கியோவில் நடந்த போட்டியில் இருவரும் தகுதிச்சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றியிருக்கின்றனர்.
10 மீ ஏர்பிஸ்டல் பிரிவில் மொத்தம் 53 வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். தகுதிச்சுற்றில் முதல் 8 இடங்களுக்குள் வருபவர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற முடியும்.
ஆனால், மனு பாகர் 575 புள்ளிகளோடு 12 வது இடத்தையும் யாஷஸ்வினி 574 புள்ளிகளோடு 13 வது இடத்தையுமே பெற்றனர். மனு பாகர் மூன்றாவது சீரிஸிலும் யாஷஸ்வினி முதல் மற்றும் மூன்றாவது சீரிஸிலும் 94 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தனர். இந்த சீரிஸ்களில் மேலும் இரண்டு இலக்கின் மையத்தை துளைக்கும் 10 ஷாட் அடித்திருந்தால் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருப்பார்கள்.
நேற்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளவேனில் வாலறிவன், சௌரப் சௌத்ரி இருவரும் சொதப்பியிருந்தனர். இன்று யாஷஸ்வினியும் மனு பாகரும் சொதப்பியிருக்கிறார்கள்.
இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கத்தை வெல்லும் என இவர்களின் மீதிருந்த நம்பிக்கையிலேயே கூறப்பட்டது. இவர்களே இப்போது சொதப்பியிருப்பதால் இந்தியாவின் இரட்டை இலக்க பதக்க கனவு நிறைவேறுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
-உ.ஸ்ரீ