இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி சிறப்பாக செயல்பட்டாலும் அவர் வழிநடத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஒரு ஐ.பி.எல் தொடரில் கூட கோப்பையை வெல்லவில்லை. அதற்குக் காரணம் அவர் தவறான வீரர்களை அணியில் விளையாட வைத்ததுதான் என ஆர்.சி.பி அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரே ஜென்னிங்க்ஸ் தெரிவித்துள்ளார்.
கோலி இந்திய அணியின் கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் 60% போட்டிகளில் வென்றுள்ளார். அதேபோல் ஒரு நாள் போட்டிகளிலும் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால் ஆர்.சி.பி கேப்டனாக அவர் சிறப்பாகச் செயல்படாதது குறித்து பேசியுள்ள ஜெனிங்க்ஸ் “ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு 25 முதல் 30 வீரர்கள் வரை இருப்பார்கள். அனைத்து வீரர்களையும் பார்த்துக்கொள்வது ஒரு பயிற்சியாளரின் கடமை.” என ஜென்னிங்க்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் “சில நேரங்களில் கோலி அனைவரிடமும் விலகி தனியாளாக இருப்பார். சில நேரங்களில் அவர் தவறான வீரர்களை விளையாட வைப்பார். நான் சில வீரர்களை சில சூழலுக்கு ஏற்றார்போல் பயன்படுத்த நினைப்பேன். ஆனால் அவர் வேறு விதமாக நினைப்பார்.” என ஜென்னிங்க்ஸ் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் “ஐ.பி.எல் என்பது சர்வதேச கிரிக்கெட்டை விட மிகவும் வித்தியாசமானது. 6 வார காலத்தில் சில வீரர்களால் சிறப்பாக விளையாட முடியும், சில வீரர்களால் சிறப்பாக தகவமைய முடியாமல் இருக்கும். ஆனால் கோலி இது குறித்து வித்தியாசமான பார்வை உள்ளவர். அவர் கொஞ்சம் கொஞ்சமாக முதிர்ச்சி அடைந்து வருகிறார். அவர் வருங்காலங்களில் ஐ.பி.எல் தொடர்களில் வெல்வார்.” எனவும் ஜென்னிங்க்ஸ் தெரிவித்துள்ளார்.