இந்திய அணியின் ஃபிட்னெஸ் பயிற்சியாளரான பாசு சங்கர், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாட வந்திருந்தாலும் இன்னும் வலுவான விளையாட்டு வீரராகத் திரும்பி வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு அனைவரையும் வீட்டுக்குள் முடக்கியது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் வரலாறு காணாத வகையில் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள். இதனால் தொடர்ந்து பயிற்சியில் இருக்கவேண்டிய அவர்களின் உடல்நிலை மற்றும் வலு குறித்த கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்தன.
தற்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உட்பட பல நாட்டு வீரர்கள் ஐ.பி.எல் 2020 தொடரில் விளையாடுவதற்காக துபாய் சென்றுள்ள நிலையில், இந்த ஊரடங்கு காலகட்டத்தை கோலி சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளதாக இந்திய அணியின் ஃபிட்னெஸ் பயிற்சியாளர் பாசு தெரிவித்துள்ளார். அவர்தான் ஆர்.சி.பி அணிக்கும் ஃபிட்னெஸ் கோச் என்பது குறிப்பிடத்தக்கது.
”கோலி இன்னும் சிறப்பான ஒரு வடிவத்தில் வந்துள்ளார். அவர் அவருடைய சிறந்த உடல் எடை மற்றும் செயல்பாட்டு வடிவத்தில் உள்ளார். முன்னர் அவர் இருந்த சிறந்த நிலையில் அவர் உள்ளார்” என பாசு தெரிவித்துள்ளார்.
மேலும் “அவர் கவனம் செலுத்தவேண்டிய முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தியுள்ளார். ’சிலுவையை ஏந்தி மகுடத்தை அணிந்துகொள்’ என்பதே அவரது வாழ்க்கை தத்துவம் என நினைக்கிறேன்.” எனவும் பாசு கோலி குறித்து தெரிவித்துள்ளார்.
பயிற்சியின் போது கோலி பாய்ந்து ஒரு பந்தைப் பிடிக்கும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்றை ஆர்.சி.பி அதனுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.