இந்தியன் பிரிமியர் லீக் கொரோனா தொற்றின் காரணத்தால் இந்தியாவிலிருந்து துபாய்க்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல நாட்கள் விளையாடப்பட உள்ள இந்த தொடரில் சொந்த நாட்டை விட்டும், வீட்டை விட்டும் பல நாட்கள் விலகியிருக்கும் அணி வீரர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு அணி நிர்வாகமும் முடிந்த அளவுக்கு அதன் வீரர்களுக்குப் பல விஷயங்களை செய்து வருகின்றன.
அந்தவகையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதன் வீரர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள பொது அறை பலரின் மனதையும் கவர்ந்துள்ளது. பல கேம்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அந்த அறையின் வீடியோ அந்த அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் அந்த அறைக்குள் நுழையும் க்ருணால் பாண்டியா ’வாவ்’ என்று ஆச்சரியமாகிறார். இதுகுறித்து அந்த வீடியோவில் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குநருமான ஜாகீர்கான் இந்த ஏற்பாடு அணியில் உள்ள வீரர்களுக்கிடையேயான இணக்கத்தை அதிகப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் “நாங்கள் எப்போதும் அணி அறையில் மிகுந்த கவனம் செலுத்துவோம் ஏனென்றால் வீரர்களுக்கிடையேயான இணக்கம் இங்குதான் ஏற்படும். வீரர்கள் நிறைய நேரத்தை இங்குதான் செலவிடப்போகிறார்கள், இந்த அமைப்புதான் 3 மாதங்களும் தொடரப்போகிறது. இது ஒரு நீண்ட காலமாக அமையப்போகிறது. அனைத்து குடும்பங்களும் வீரர்களும் இங்கேதான் கலக்கப்போகிறார்கள்.” எனவும் ஜாகீர் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் ”மைதானத்தில் உற்சாகமூட்டும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் இல்லாமல் இந்த முறை நாங்கள் விளையாட உள்ளோம். நாங்கள் எங்கே இருந்தாலும் எங்களுடைய ரசிகர்களும் அங்கே இருப்பார்கள்.” என ரசிகர்களுக்காகவே ஒதுக்கப்பட்ட ஒரு சுவரை ஜாகீர்கான் காட்டும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.