கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது உறவினர் கொலை சம்பவம் குறித்து ட்விட்டரில் பஞ்சாப் முதலமைச்சர் மற்றும் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதைச் செய்த குற்றவாளிகளை விட்டுவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த ரெய்னாவின் மாமா சில மர்ம நபர்களால் சில நாட்களுக்கு முன்பு அவர் வீட்டிலேயே தாக்கிக் கொல்லப்பட்டார். மேலும் அவரது மனைவி பிள்ளைகளும் அந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்தனர். அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிள்ளைகளில் ஒருவரும் உயிரிழந்தார்.
ரெய்னாவின் அத்தை உடல்நிலை மோசமாக கவலைக்கிடமாக உள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரெய்னா “பஞ்சாபில் என் குடும்பத்துக்கு நடந்தது மிகக் கொடூரம் என்பதையும் தாண்டியது. என்னுடைய மாமா வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். என்னுடைய அத்தை மற்றும் அவர்களது பிள்ளைகள் கடுமையாக காயமடைந்துள்ளனர். துரதிருஷ்டவசமாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எனது மாமா மகன் நேற்று இரவு இறந்துவிட்டார். என்னுடைய அத்தை மிக மோசமான நிலையில் உள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங்கை டேக் செய்து அந்த குற்றவாளிகளை விட்டுவிடக்கூடாது எனவும் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார்.
”இதுவரை அந்த இரவில் என்ன நடந்தது யார் இதைச் செய்தார்கள் என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. நான் இந்த சம்பவத்தை பஞ்சாப் காவல்துறை கவனிக்குமாறு கேட்டுகொள்கிறேன். இந்த கொடூரமான செயலை அவர்களுக்கு யார் செய்தது என்பதையாவது தெரிந்துகொள்ள நாங்கள் உரிமையுள்ளவர்கள். மேலும் இதுபோன்ற குற்றங்களைச் செய்ய அந்த குற்றவாளிகளை விட்டுவிடக்கூடாது.” என ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.
துபாய்க்கு ஐ.பி.எல் தொடரில் விளையாடச் சென்ற ரெய்னா சில தனிப்பட்ட காரணங்களால் சென்ற வாரம் தொடரிலிருந்து விலகி, இந்தியா திரும்பியது குறிப்பிடத்தக்கது.