இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அதே நாளில் புதிய கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். அமெரிக்க தயாரிப்பான போண்டியாக் ஃபயர்பேர்ட் டிரான்ஸ் ஏம் என்ற அந்த காரின் வீடியோவை அவரது மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தோனியின் கார் மற்றும் பைக் மீதான காதல் அனைவரும் அறிந்த ஒன்று. அவரிடம் ஏராளமான பைக்குகள் மற்றும் கார்கள் உள்ளன. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதியன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தோனி அதே நாளில் புதிய கார் ஒன்றையும் வாங்கியுள்ளார்.
அமெரிக்கன் மஸுல் வகை காரான போண்டியாக் ஃபயர்பேர்ட் டிரான்ஸ் ஏம் காரை அவர் வாங்கியுள்ளார். இந்த கார் 1970-ம் ஆண்டைச் சேர்ந்த தயாரிப்பு. அமெரிக்க சாலைகளில் காணக்கிடைக்கும் இந்த கார் இந்தியாவில் மிகவும் அரிது.
ராஞ்சியில் உள்ள தோனியின் பண்ணை வீட்டில் இந்த காரை ஓட்டிச் செல்லும் வீடியோவை சாக்ஷி பகிர்ந்துள்ளார். ‘வருக’ என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் சாக்ஷி பகிர்ந்துள்ளார். தற்போது ஐ.பி.எல் தொடருக்காக தோனி சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த போண்டியாக் ஃபைர்பேர்ட் லெஃப்ட் ஹாண்ட் டிரைவ் அமைப்பு கொண்டது. இரண்டு கதவுகளை மட்டுமே கொண்ட இந்த கார் வி8 என்ஜின் பொருத்தப்பட்டது. இந்த காரை தோனி எவ்வளவு விலை கொடுத்து வாங்கினார் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் மும்பையில் நடந்த ஏலத்தில் இந்த வகை கார் 68.31 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது.
இந்த வகையான அமெரிக்கன் மஸுல் கார்கள் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் போன்ற படங்களில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.