நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் திருவிழா நடப்பாண்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஜப்பானில் நடைபெறுகிறது. இதற்காக வீரர்கள் மும்முரமாகத் தயாராகி வரும் நிலையில், சீனாவில் உருவான கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்ப்பலிகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனால், முக்கிய போட்டிகள் பல ஒத்திவைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் வீரர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
ஜப்பானிலும் கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ள சூழலில், இதுவரை 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 15 பேர் அந்நாட்டில் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இதற்கு ஜப்பான் அரசும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் பதிலளித்துள்ளன.
அதில், கொரோனா தாக்கத்தால் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பில்லை எனவும், திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர். வீரர்களின் நலனுக்காக சுகாதார பாதுகாப்பு பல மடங்கு மேம்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ள ஜப்பான் அரசு அதற்கான ஏற்பாடுகளிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
பல்வேறு சிக்கல்களுக்கு இடையில், ஒலிம்பிக் சுடரானது க்ரீஸில் உள்ள Ancient Olympia-வில் பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் ஏற்றப்பட்டது. இந்தச் சுடரை 2016 ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஒலிம்பிக் சாம்பியனான க்ரீஸ் நாட்டை சேர்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை Anna Korakaki ஏற்றி வைத்தார்.
ஒலிம்பிக் சுடரை வீராங்கனை ஒருவர் ஏற்றுவது இதுவே முதல் முறையாகும். இதன்மூலம், ஒலிம்பிக் சுடரை ஏற்றி அதனை முதலாவதாக கையில் வைத்து வலம் வந்த முதல் வீராங்கனை என்ற பெயரை பெற்றார் Anna Korakaki. 7 நாள் ஓட்டத்திற்குப் பிறகு இந்த ஒலிம்பிக் சுடரானது க்ரீஸ் தலைநகர் ஏதன்ஸில் ஒலிம்பிக் போட்டிக்கான அதிகாரப்பூர்வ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டு தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.