ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சர்வதேச மகளிர் தினமான நாளை (மார்ச் 8) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள மகுடத்திற்கான இறுதி யுத்தத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய நேரப்படி இந்தப் போட்டி நண்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது.
இவ்விரு அணிகள் மோதும் இந்த இறுதிப்போட்டி உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இந்திய மகளிர் அணி முதல் முறையாக உலகக்கோப்பை டி20 இறுதி ஆட்டத்தில் அடியெடுத்து வைத்ததுதான்.
நடப்பு தொடரில் தோல்வியே காணாமல், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, இறுதி ஆட்டத்திலும் வெற்றி வாகை சூட முயற்சிக்கும். லீக் சுற்றில் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உற்சாகத்தில், இந்த இறுதி ஆட்டத்திலும் வீழ்த்த காத்திருக்கின்றனர் இந்திய வீராங்கனைகள்.
ஷஃபாலி வெர்மா, மந்தனா உள்ளிட்டோர் பேட்டிங்கிலும், பூனம் யாதவ், ஷிகா பாண்டே, ராதா யாதவ் உள்ளிட்டோர் பந்துவீச்சிலும் இந்திய அணி திறம்பட தயாராகியுள்ளது. லீக் ஆட்டங்களில் பெரிதாக ரன் சேர்க்காத ஹர்மன்ப்ரீத் கவுர் இந்தப் போட்டியில் ரன் குவிப்பை ஏற்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தவிர, இறுதிப்போட்டி நடைபெறும் மார்ச் 8ஆம் தேதி இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்-க்கு 31வது பிறந்தநாளாகும். தனது பிறந்தநாளன்று கோப்பையை வென்று வரலாற்றில் பொறித்து தாய்நாட்டிற்கு பெருமிதம் சேர்க்கும் முனைப்பில் உள்ளார் கவுர். முதல் முறையாக மகளிர் டி20 உலகக்கோப்பை அரங்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணியினர், கோப்பையை வென்று வீறுநடை போடுவர் என நம்பலாம்.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை பலம் வாய்ந்த அந்த அணி, உலகக்கோப்பை டி20 அரங்கில் இதுவரை 6 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி, 4 முறை கோப்பையை வென்றுள்ளது.
நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தும், சொந்த மண்ணில் போட்டி அரங்கேறுவதும் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய சாதகமாக பார்க்கப்படுகிறது. லீக் சுற்றில் இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தக்க பதிலடி கொடுக்கக் காத்திருக்கின்றனர்.
கேப்டன் Meg Lanning, Erin Burns, Ellyse Perry என வலுவாக தயாராகியுள்ள ஆஸ்திரேலிய படை இறுதிப்போட்டியில் இந்தியாவை பழிதீர்த்து கோப்பையை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது.
இவ்விரு அணிகள் மோதும் இறுதிப்போட்டிக்கான ரசிகர்கள் வருகை அதிகரித்துள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் இருக்கை வசதி ஒரு லட்சத்து 24 ஆயிரம் ஆகும். இந்நிலையில், நாளைய இறுதிப்போட்டியை காண இதுவரை 75,000 டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகளிர் உலகக்கோப்பை போட்டி ஒன்றிற்கு இவ்வளவு டிக்கெட் விற்பனை ஆகியுள்ளது இதுவே முதல் முறை என்பது வரலாற்றுச் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை டி20 அரங்கில் 19 முறை மோதியுள்ளதில் 13 முறை ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்க வைக்க ஆஸ்திரேலியாவும், முதல் முறையாக கோப்பையை அலங்கரித்து இதயங்களை வெல்ல இந்திய வீராங்கனைகளும் மல்லுக்கட்டவிருக்கும் இந்த இறுதிப்போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.