மகளிர் கிரிக்கெட் T20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வரும் 16 வயதேயான இளம் வீராங்கனை ஷஃபாலி வெர்மா ஐ.சி.சி தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
18 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஹரியானாவைச் சேர்ந்த ஷஃபாலி வெர்மா, முதன்முதலாக தரவரிசையில் முதலிடம் பிடித்து இந்திய அணியை பெருமைப்படுத்தியுள்ளார்.
2018ம் ஆண்டு முதல் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணியின் சுஸி பேட்ஸை பின்னுக்குத் தள்ளி 19 இடங்களில் முன்னேறி 761 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார் ஷஃபாலி.
இதுமட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக விளங்கிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்துள்ளார் ஷஃபாலி வெர்மா. சச்சின் தனது 16வது வயதில் முதல் அரைசதம் அடித்தார். அதே வயதில் வீராங்கனை ஷஃபாலி 2 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார். 30 ஆண்டுகளாக இருந்துவந்த சச்சினின் இந்தச் சாதனையை தற்போது ஷஃபாலி முறியடித்துள்ளது கூடுதல் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, பவுலிங் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் சோஃபி எக்லெஸ்டோன் முதலிடம் வகிக்கிறார். இந்தத் தகவலை ஐ.சி.சி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்த T20 உலகக்கோப்பை லீக் போட்டியில், ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய மகளிர் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா, இங்கிலாந்து இடையேயான இந்தப் போட்டி நாளை (மார்ச் 5) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.