வீரர்களின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில், நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து வீரர்களின் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்சில் 1 ரன், இரண்டாவது இன்னிங்சில் 19 ரன்கள் என மொத்தம் 20 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால், 5 புள்ளிகளை இழந்த கோலி 911 புள்ளிகளிலிருந்து 906 புள்ளிகளுடன் 2 வது இடத்திற்கு பின்னடைந்து சரிவை சந்தித்தார். 2வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் 911 புள்ளிகளைப் பெற்றதை அடுத்து, விராட் கோலியின் முதல் இடத்தை தட்டிப்பறித்தார்.
முதல் பத்து இடங்களுக்குள் இந்திய வீரர்களில் ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால் ஆகியோர் முறையே 8,9,10 இடங்களை பிடித்துள்ளனர்.
இதேபோல் பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம்பிடித்துள்ளார். இந்திய சுழற்பந்து வீரர் அஸ்வின் 765 புள்ளிகளுடன் ஒரு இடம் சரிந்து 9வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 904 புள்ளிகளிடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.