2009ம் ஆண்டில் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டபிறகு பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் அதிகளவில் நடைபெறவில்லை. இந்நிலையில், இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருந்தது.
பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கூறி இலங்கை டி20 கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ் உள்ளிட்ட முக்கிய 10 வீரர்கள் தொடரிலிருந்து விலகி உள்ளனர். இதனால் பாகிஸ்தான் - இலங்கை தொடர் நடக்குமா என்பது சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்ததற்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹுசைன் சவுத்ரி குற்றம்சாட்டி இருந்தார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை இலங்கை வீரர்கள் தவிர்க்காவிட்டால் ஐ.பி.எல் தொடரிலிருந்து நீக்கப்படுவீர்கள் என இந்தியா மிரட்டியதால் தான் இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் வர மறுக்கிறார்கள். இதனை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். இது இந்திய விளையாட்டு ஆணையத்தின் மலிவான செயல்“ என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மறுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அவர், இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் பயணத்தில் இருந்து விலகியதற்கு எவ்விதத்திலும் இந்தியா காரணம் இல்லை. 2009ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலின் அச்சம் காரணமாகவே வீரர்கள் விளையாட தயங்குகின்றனர். அவர்களின் முடிவை மதித்து, தொடருக்கு வர விருப்பம் உள்ள வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய உள்ளோம்'' என தெரிவித்தார்.