எண்ணெய்க்காக போர், ஆட்சி-அதிகாரத்துக்காக போர், மொழிக்காக போர் என பல போர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இரண்டு நாடுகளுக்கு இடையே ஒரு கிரிக்கெட் போட்டியையே போராக கருதுவதை பார்த்திருக்கிறீர்களா? அதுவும் 5 அங்குல கோப்பைக்காக நடக்கும் போர். ஆம், அந்தப் போருக்கு ‘ஆஷஸ்’ என்று பெயர்.
வார்த்தை பரிமாற்றங்கள் துவங்கி களத்தில் மோதிக்கொள்ளாத குறையாக நடந்து கொள்வது வரை அனைத்துமே இந்த ஆட்டங்களில் நடக்கும். இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதிக் கொள்ளும் 71வது ஆஷஸ் தொடர் தற்போது துவங்கியுள்ளது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் 1882-ம் ஆண்டுக்குப் பிறகு 'ஆஷஸ் தொடர்' என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன. 1882-ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட வென்றதில்லை. ஆனால் 1882-ல் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்றது.
இத்தனைக்கும் அந்த ஒரு போட்டியில்தான் இங்கிலாந்து தோற்றிருந்தது. தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்துதான். ஆனாலும், ஓவல் தோல்வியை விமர்சித்து எழுதிய இங்கிலாந்து பத்திரிகையான 'தி ஸ்போர்டிங் டைம்ஸ்', ''இங்கிலாந்து கிரிக்கெட் இறந்துவிட்டது, இங்கிலாந்து கிரிக்கெட் எரிக்கப்பட்டு சாம்பல் ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது'' என இரங்கல் செய்தியாக வெளியிட்டது.
பின்னர், 1882-83 சீசனில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரண்டு டெஸ்ட்களின் முடிவில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகிக்க, மூன்றாவது டெஸ்ட்டை இங்கிலாந்து வென்று பழிதீர்த்தது. அதற்குப் பரிசாக மெல்போர்னைச் சேர்ந்த மூன்று பெண்கள், இங்கிலாந்து கேப்டன் இவோ ப்லிக்கிற்கு ஒரு கோப்பையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பெயில்ஸ்களை எரித்து சாம்பலாக வழங்கினார்கள் என்று கூறப்படுகிறது.
அதன்பின் 20 வருடங்கள் கழித்து 'ஆஷஸ்' என்ற பெயரில் அதிகாரப்பூர்வ தொடர் துவங்கப்பட்டது. 1921 ல் லண்டனை சேர்ந்த பத்திரிக்கையில் ஆஷஸ் கோப்பையின் வடிவம் வெளியிடப்பட்டது. மரக்கோப்பைக்குள் சாம்பல் அடைக்கப்பட்டது போன்ற 5 அங்குல கோப்பை அது.
தற்போது அந்த கோப்பையை எந்த அணி வென்றாலும் அந்த அணிக்கு ஆஷஸ் சாம்பியன் என்ற பெயர் இருக்கும்; ஆனால் கோப்பை எம்சிசியில் பாதுகாக்கப்படும். ஆனால் இது இவோ ப்லிக்கிடம் இருந்த கோப்பையின் மாதிரிதான் என்று கூறப்படுகிறது. அதே வடிவம் தான் புதுமையாக வடிவமைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆஷஸ் தொடர் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி நடைபெற்று வருகிறது. இதுவரை 70 தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் மொத்தம் 330 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 134 போட்டிகளை ஆஸ்திரேலியாவும், 106 போட்டிகளை இங்கிலாந்தும் வென்றுள்ளன,90 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.
இங்கிலாந்தில், இங்கிலாந்து அணி அதிகமான போட்டிகளையும், ஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலிய அணி அதிகமான போட்டிகளையும் வென்றுள்ளது. 70 தொடர்களில் ஆஸ்திரேலியா 33 தொடர்களையும், இங்கிலாந்து 32 தொடர்களையும் வென்றுள்ளன. இந்த தொடரை இங்கிலாந்து வென்றால் தொடர் கணக்கு சரிசமமாகும்.
வார்னே, ஃபிளின்டாப், ஸ்ட்ராஸ், ரிக்கி பாண்டிங் போன்ற வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டவை மிகவும் பிரபலமாகும். 1989க்கு பிறகு தொடர்ந்து தோல்வி அடைந்து வந்த இங்கிலாந்து 2005ல் ஃப்ளின்டாப், பீட்டர்சன் என பெரும்படையோடு தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து கோப்பையை 'ரிட்டர்ன் ஆஃப் ஆஷஸ்' ஆக்கியது இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றின் பக்கங்களில் ஒன்று.
இந்த முறை யார் வெற்றி பெறுவார்கள் என்று பார்த்தால் இரு அணிகளும் புதிய திறமைகளைத்தான் பெரிதும் நம்பி உள்ளன. களத்தில் வெற்றி தோல்விகளை விட ஸ்லெட்ஜிங் எனும் வசைபாடுதல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
உலகக் கோப்பையை வென்ற உற்சாகத்தில் இங்கிலாந்தும், தடைக்குப் பின் அணிக்கு திரும்பிய வார்னர், ஸ்மித், பான்க்ராஃப்ட் பலத்துடன் ஆஸ்திரேலியாவும் மோதிக்கொள்ளும் ஆஷஸ் போர் இங்கிலாந்தின் எட்பாஸ்டனில் துவங்கியுள்ளது.
அட என்னப்பா இது... 5 அங்குல கோப்பைக்கா இந்த அக்கப்போர் என்றால் ஆம்! ஜூலை 9 ல் தொடங்கும் ஆஷஸ் வெறும் கிரிக்கெட் அல்ல ஒரு போர்தான்!