சையத் முஷ்டாக் முதல் தர கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ப்ரித்வி ஷாவுக்கு, பிப்ரவரி மாதம் இந்தூரில் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய பொருளை ஷா உட்கொண்டது உறுதியானது. இருமலுக்காக எடுத்துக் கொண்ட டானிக்கில் அந்த தடை செய்யப்பட்ட வேதிப் பொருள் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக ஜூலை 16ம் தேதி அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தற்போது ப்ரித்வி ஷா இந்திய அணியில் விளையாட மார்ச் 16ம் தேதி முதல் நவம்பர் 15ம்தேதி வரை, மொத்தம் 8 மாதங்கள் தடைவிதித்துள்ளது பி.சி.சி.ஐ.
இது குறித்து ப்ரித்வி ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கொடுத்த விளக்கத்தில், '' பி.சி.சி.ஐ அறிவித்த பிறகே நான் ஊக்கமருந்து உட்கொண்டிருப்பது எனக்கு தெரியவந்தது. இந்த தடைக்காலம் எனக்கு பேரிடியாக உள்ளது. இருப்பினும் இதனை கடந்து நான் மீண்டு வருவேன். சையத் முஷ்டாக் அலி தொடரின் போது அணி மருத்துவர்களின் ஆலோசனையின்றி நானாக ஒரு மருந்தை உட்கொண்டேன். அதுவே நான் செய்த தவறு. என் விதியை முழு மனதாக ஏற்கிறேன்'' என தெவித்துள்ளார்.
தடை இப்போது விதிக்கப்பட்டாலும், பிப்ரவரி மாதமே ஊக்கமருந்து உட்கொண்டது தெரியவந்ததால், அப்போதிலிருந்தே தடை கணக்கிடப்படுகிறது. இதனால் நவம்பர் 15ம் தேதி வரை விளையாட ப்ரித்வி ஷாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் வரை விதிக்கப்பட்டுள்ள தடையால், அக்டோபரில் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்கா, நவம்பரில் நடைபெறவுள்ள வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடர் வரை அவர் இந்திய அணிக்காக விளையாட முடியாது.
ஏற்கெனவே காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தவர் தற்போது இந்தப் பிரச்னையின் காரணமாக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான இவருக்கு விதிக்கப்பட்ட தடை இந்திய ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.