உலகக் கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் ஆட்டமிழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஒருபக்கம் ரசிகர்கள் சோகமாக இருந்தாலும் மறுபக்கம் இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் தோல்வியை முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதனால், இந்திய அணியின் கேப்டன்ஷிப்பை கோலியிடம் இருந்து பறித்து, ரோஹித் சர்மாவிடம் வழங்கவேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறிவந்தனர். இதற்கு முன்னர் கோலியின் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி 2017ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ரசிகர்கள் மட்டுமே இக்கருத்தினை கூறிவந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் வாசிம் ஜாபர் ரோஹித்திற்கு கேப்டன் பதவி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள பதிவில், “ இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டதா? 2023-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்த நான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையில் ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி நான்கு முறை கோப்பை வென்றுள்ளது. அதேபோல் இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் நிடஹாஸ் டிராபி ஆகியவற்றை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால், கோலி தலைமைப் பண்புக்கு சரியானவர் அல்ல; அவரது ஆக்ரோஷ மனநிலை பல நேரங்களில் வீண் பிரச்னையையே இந்திய அணிக்கு கொண்டு வந்துவிட்டுள்ளது. அதனால், கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மாவுக்கு கொடுப்பதே சரியானது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளது சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.