1989-ம் ஆண்டு கிரிக்கெட் பேட்டை கையில் எடுத்த சச்சின் டெண்டுல்கர், 2019-ம் ஆண்டு கமெண்ட்ரி மைக்கை கையில் எடுத்திருக்கிறார்.
நேற்று தொடங்கிய உலகக் கோப்பை 2019 தொடரின் முதல் போட்டியில், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சச்சின், ஷேவாக், கங்குலி ஆகியோர் வர்ணனையாளர்களாக இருந்தனர்.
பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் ஒன்றிணைந்துள்ளது என ஷேவாக் தனது ட்விட்டர் பகத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
நேற்றைய கமெண்ட்ரியின் போது சச்சினிடம், ” இந்த உலகக் கோப்பை தொடரில் ஸ்டாராக ஜொலிக்கப்போவது யார்? உங்கள் சாய்ஸ் என்ன?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
பேட்ஸ்மேன்களில் வார்னரை தேர்ந்தெடுத்தார் சச்சின். “ வார்னர் ரன் பசியில் இருக்கிறார். ஐ.பி.எல்லில் அவரிடம் ஒரு ஆக்ரோஷம் தெரிந்தது. வார்னர் ஃபிட்டான வீரர் தான். ஆனால் ஐ.பி.எல்லில் அந்த ஃபிட்னஸ் வேற லெவலில் இருந்தது” என்றார் சச்சின்
பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுக்க சிறிது யோசித்த சச்சின், இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரை தனது சாய்ஸ் என்றார். “பேட்ஸ்மேன்கள் ரன் எடுப்பதை தடுக்க ஆர்ச்சரால் முடியும். விக்கெட் வேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் இங்கிலாந்து அணி ஆர்ச்சரை நம்பலாம்.” என்றார்.
சச்சினின் சாய்ஸ் சரியானது தான் என்பதை ஆர்ச்சர் நிரூபித்தார். நேற்றைய போட்டியில் தென் ஆப்ரிக்க அணியின் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 7 ஓவர்கள் வீசி வெறும் 27 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.
பந்து வீச்சாளர்களில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானுக்கு ஒரு அறிவுரையும் வைத்திருந்தார் சச்சின் “ டெஸ்ட் போட்டியாக நினைத்து ரஷித் பந்து வீச வேண்டும். பேட்ஸ்மேனை திணறடிக்கும் பந்துகளை தொடர்ந்து வீசி வந்தால் நிச்சயம் அவர் பல விக்கெட்களை வீழ்த்துவார்” என்கிறார் சச்சின்.