அரசியல்

“மகா பெரியவாளை” சனாதனவாதி இல்லையென கூறுகிறாரா ஆளுநர் ரவி? - சிலந்தி கட்டுரை கேள்வி !

“மகா பெரியவாளை” சனாதனவாதி இல்லையென கூறுகிறாரா ஆளுநர் ரவி? - சிலந்தி கட்டுரை கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆளுநர் ரவியின் சமீபகால நடவடிக்கைகள், பேச்சுக்கள் இவைகளைப் பார்த்தால் ஏதோ ஒருவித 'போபியா'வால் பாதிக்கப்பட்டிருப்பாரோ என எண்ணிடத் தோன்றுகிறது! பாரதிய ஜனதா கட்சிக்கு கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 'பூஜ்யம்' என்ற அளவிற்கு ஆக்கிய அத்தனை 'பெருமை'களுக்கும் சொந்தக்காரர்களாக விளங்கிய இருவரில் ஒருவரல்லவா; ரவி!

தமிழ்நாட்டு ஆளுநர் என்ற பொறுப்பை ஏற்று தமிழ்நாட்டுக்கு வந்த நாளிலிருந்து அவர் பொறுப்புணர்ந்து செயல்படாமல் தமிழ்நாட்டை ஆண்டிடும் அரசுக்கு 'பூச்சாண்டி' காட்டிடும் பணியில் ஈடுபட்டு பல நேரங்களில் மூக்குடைபட்டும் அவர் திருந்தியதாகத் தெரியவில்லை! தனக்கு அதாவது ஒரு ஆளுநருக்கு வரையறுக்கப்பட்டுள்ள வரம்பை மீறி நடந்து சட்டமன்றத்தில் மூக்குடைபட்டார். வரலாற்றிலே எங்கும் காண இயலாத அளவு ஆளுநர் உரை முடிந்து தேசியகீதம் ஒலிக்கும் முன்பே அவையை விட்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறி ஆளுநர் பதவிக்கான மரியாதையைப் படுபாதாளத்தில் தள்ளினார். அரசியல் சட்டம் அளித்த அதிகார வரம்பை மீறி ஆணவத்துடன் செயல்பட்டு பலமுறை உச்சநீதிமன்றத்தால் குட்டுபட்டார். இதற்குப் பிறகாவது திருந்தி யிருப்பார் என்று எண்ணினோம். ஏமாற்றமே மிச்சம்

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் 39-க்கு 39 என்ற அளவில் தி.மு.கழக அணிக்கு வெற்றி தந்து, தமிழக மக்கள் பா.ஜ.க. கூட்டத்தின் முகத்தில் பூசிய கருப்பு மை ஆளுநர் ரவியின் முகத்திலும் பிரதிபலித்ததின் விளைவால் தேர்தல் முடிவுக்குப் பின் சில காலம் தனது அபத்த வியாக்ஞானங்களுக்கு ஓய்வு அளித்திருந்த ஆளுநர் ரவி இப்போது மீண்டும் தனது Half Boiled அதாவது பாதி வெந்த அறிவை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளார்.

“மகா பெரியவாளை” சனாதனவாதி இல்லையென கூறுகிறாரா ஆளுநர் ரவி? - சிலந்தி கட்டுரை கேள்வி !

கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 'இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது' என்று பேசிய ரவி இந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில், 'இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை என்பது ஐரோப்பிய கருத்து; என்று கூறியதோடு விடாமல் ஒரு பாதுகாப்பற்ற பிரதமர் சில பிரிவினரை திருப்திபடுத்து வதற்காக அரசியலமைப்பில் மதச்சார்பின்மை'யை அறிமுகப்படுத்தினார்' - என்று பேசி, அரசியல் சட்டத்தின் பேரில், “ do Swear in the name of God Solemnly affirm that I will faithfully execute the office of the Governer and will to the best of my ability, Preserve, Protect and defend the constitution and law" “நான் இந்த ஆளுநர் பொறுப்பை என்னுடைய திறமைக்கு ஏற்ப, இந்திய அரசியல் சட்டத்தைக் காத்து, பாதுகாத்து, காவல் காத்து செயல்படுத்துவேன்” என்று உறுதிமொழி ஏற்றுதான் ஆளுநரானார் ரவி!

அவர் எந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி ஏற்றாரோ; அந்தச் சட்டத்தில் 'மதச்சார்பின்மை' (Secular) என்ற வாசகம் தெளிவாக இருக்கிறது, அந்த மதச்சார்பின்மையைக் காத்திடுவேன் எனக் கடவுளின் பேரால் உறுதிமொழி ஏற்றவர்தான் ரவி! *அய்யகோ! மதச்சார்பின்மை என்பது என்னால் ஏற்க முடியாத சொல் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளது; அதனை ஏற்று உறுதிமொழி ஏற்றிடமாட்டேன்” என்று கூறி கவர்னர் பதவியை ஏற்க மறுத்து இருந்தால், ரவியின் இலட்சிய வேட்கையை பாராட்டியிருக்கலாம்.

பதவி கிடைத்தால் போதும்; என்ற நிலையில் கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்றுவிட்டு இன்று வீராவேசம் பேசிக் கொண்டிருக்கும் இந்த 'வெத்து வேட்டு' பேர் வழியை எந்த ரகத்தில் சேர்ப்பது? நடைமுறையில் இன்று இருக்கும் அரசியல் சட்டத்தை ஏற்று அதற்கு எந்தவித பங்கமும் வராது பாதுகாப்பேன் என ஆண்டவன் பேரால் உறுதி ஏற்றுவிட்டு, அந்த அரசியல் சட்டத்தினை தனது ஆளுநர் பதவியை தூக்கி எறிந்து விட்டு சாதாரண ரவியாக விமர்சித்திருந்தால் அவரது ஆண்மையை பாராட்டியிருக்கலாம். அதை விட்டுவிட்டு அரசியல் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு பதவி ஏற்ற பின்னர் அதை விமர்சிக்கும் ஆளுநர் ரவி போன்றோர் அந்தப் பதவியின் அவமானச் சின்னங்களாகவேத் தங்களை ஆக்கிக் கொண்டுள்ளனர்! ஆளுநர் ரவியின் இந்தப் பேச்சு, எல்லா அரசியல் கட்சித் தலைவர்களின் கண்டனத்துக்கு ஆளானது ! அதற்காக மனிதர் கவலைப்பட்டதாகவோ தன்னைத் திருத்திக் கொண்டதாகவோ தெரியவில்லை. ஒரு குடு அல்ல; பல குடுகள் பட்டும் அந்த தடித்த தோவில் உறைக்கவில்லை போலும்!

“மகா பெரியவாளை” சனாதனவாதி இல்லையென கூறுகிறாரா ஆளுநர் ரவி? - சிலந்தி கட்டுரை கேள்வி !

இப்போது ஆளுநர் மாளிகையில் வள்ளலார் விழா நடத்தி, அங்கே மீண்டும் சனாதன தர்மத்துக்கு வக்காலத்து வாங்கியுள்ளார். இந்தச் சனாதன தர்மம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நாட்டில் வெகுவாக அலசப்பட்டு, பிரதமர், உள்துறை அமைச்சர் முதல் தலைவெட்டி சாமியார்கள் வரை ஆவேசத்துடன் குதித்து பின்னர் அடங்கிபோன ஒன்று! இப்போது வள்ளலார் விழாவில் அந்த சனாதன தர்மத்துக்குப் புதுவேடம் கட்டிக்கொண்டிருக்கிறார் ஆளுநர் ரவி! அவர் தமிழ்நாட்டின் ஆளுநராகநியமிக்கப்பட்டு, வந்த புதிதிலேயே தனது ஆட்டத்தை துவங்கிய போதே, அவருக்கு இந்த மண்ணின் மகத்துவத்தை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம்! சனாதன தர்மம் என்ற போர்வையில் வர்ணாசிரமத்தை விதைத்து, ஆண்ட இனத்தை அடிவருடிகளாக்கி கொழுத்த கூட்டத்தை, மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டி தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பி அவர்களை தலைநிமிரச் செய்திட்ட தந்தை பெரியாரின் பூமி இது!

பெரியாரின் வழியொட்டி பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் போன்றோர் பண்படுத்திய மண் இது !

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களோடும் செழும்பரிதி தன்னோடும்

விண்ணோடும் உடுக்களோடும், மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்: ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றுற் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே!"

--என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் கேட்டு முறுக்கேறிய சுயமரியாதைச் சிங்கங்கள் இரத்தம் சிந்தி உருவாக்கிய தியாக திருத்தலம் இது! இங்கே மீண்டும் மீண்டும் சனாதனத்தை சதிராட விட நினைத்தால், அப்படி நினைப்பவர்கள் எண்ணத்தை சுக்கு நூறாக சிதறடிக்கும் விபரம் தெரிந்த வீறு கொண்ட இளைஞர்களை உருவாக்கி உலவ விட்டுள்ள இயக்கம் திராவிட இயக்கம் என்பதை ஆளுநர் ரவி உணராது நரி வாலை விட்டு ஆழம் பார்ப்பதுபோல வாலை நுழைத்துப் பார்க்கிறார்.

கிண்டி ஆளுநர் மாளிகையை மேற்கு மாம்பல அயோதிய மண்டபமாக்கிக் கொண்டிருக்கிறார். ஆளுநர் மாளிகையில் வள்ளுவருக்கு காவிச் சாயம் பூசப்பட்டது போல அங்கு நடந்த வள்ளலார் பிறந்த நாள் விழாவில் வள்ளலாருக்கு சனாதான சாயம் பூச முற்பட்டுள்ளார். அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம். சனாதனத்தில் வேறுபாடு கிடையாது. இதில் வேறுபாடு பார்த்து சிலர் குளிர்காய நினைக்கிறார்கள். சிலர் சனாதனத்தை சாதியோடு ஒப்பிட்டுப் பேசி தவறான புரிதலை உருவாக்குகின்றனர். சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதிகள் அல்ல” என்ற புதிய விளக்கங்களைத் தந்துள்ளார்.

ஆளுநர் ரவிக்கு 'காஞ்சி மகாப் பெரியவர்' - என்று கூறப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியாரை தெரியும் என்று நம்புகிறோம். ரவியின் இனத்தவர்கள் அன்றும் இன்றும் தங்களது வாழும் கடவுளாக எண்ணி பூஜித்து கொண்டிருக்கும் 'மகாப் பெரியவர்' அவர்! அவர் வாக்குகளை தெய்வ வாக்காகவே அவர்கள் கருதிடுவர்! ஆளுநர் ரவியும் அதனை ஏற்றிடுவார் என்பதில் ஐயம் இல்லை. 'பெரியவர்' எழுதிய 'தெய்வத்தின் குரல்' எனும் நூலினை ரவியின் பார்வைக்கு வைக்கிறோம். “இன்னமும் முழுக்க அணைந்து போகாமல் இருக்கும் ஸநாதன தர்மத்தை ஊதி ஊதி எல்லாரிடமும் பரவச் செய்யலாம் என்பது எனது பேராசை. நம்முடைய ஸநாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வர்ண தர்மம் இருப்பதால் இது அவசியமில்லை என்று எடுத்துப் போட்டுவிட்டு நம் மதத்தையும் மற்றவை மாதிரி ஆக்கி விட வேண்டும் என்று சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறார்கள்.

'வர்ணம்' என்ற பெயரில் சமூகத்தைப் பரம்பரை ரீதியில் வெவ்வேறு தொழில்களாகப் பல பிரிவாகப் பிரித்து சில விசேஷ தருமங்கள் அவரவருக்கும் விதிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாருக்கும் அனுஷ்டானம் ஒன்று என்று சமமாக வைத்துக் கொண்டிருந்த பெரிய பெரிய மதங்களை எல்லாம் காலப் பிரவாகம் எங்கேயோ அடித்துக் கொண்டு போயிருக்கிறது. ஆனால் பல வகுப்பாக சமுதாயத்தை வர்ண தர்மத்தில் பிரித்து வைத்திருக்கின்ற நம் மதமோ இன்றளவும் 'என்னை யார் என்ன செய்துவிட முடியும்' என்று மூச்சை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது." இவ்வாறு கூறியிருப்பது காஞ்சி மகாப்பெரியவாள்! இப்படி கூறியிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியாரை ஆளுநர் ரவி எதிர்க்கிறாரா? அல்லது தன்னைப் பெரியவாளுக்கும் பெரியவாளாகக் காட்டிக் கொள்ள நினைக்கிறாரா? திராவிட இயக்கத்தைக் கிள்ளு கீரையாக நினைக்கவேண்டாம். இதன் கருத்தாக்கம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அங்கிங்கெனாதபடி எங்கும் வேரோடி இருக்கிறது! இது உருவாக்கியுள்ள தாக்கத்தால் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழின மக்களை மீண்டும் சனாதன தர்மம் பேசி அடி மையைாக்க நினைக்கும் சாதுர்ய பேச்சுக்களின் இடுப்பொடிக்க அங்கிங்கெனாதபடி எங்கும் விரிந்து கிடக்கிறது; விபரம் உணர்ந்த இளைஞர் கூட்டம் என்பதை ஆளுநர் ரவிக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

banner

Related Stories

Related Stories