முரசொலி தலையங்கம் (08-10-2024)
பவன் கல்யாணின் பம்மாத்து.
மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனக் கொள்கைக்கு எதிராக மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கருத்துச் சொன்னதும், காலம்காலமாக மக்களைப் பிளவுபடுத்தி வரும் சக்திகள் அவருக்கு எதிராகக் கொந்தளித்தார்கள். ஆனால் சொன்ன சொல்லில் உறுதியாக இருந்தார் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின். இவையெல்லாம் ஓராண்டுக்குமுன்பு. இப்போதும் அந்தத் தீ எரிந்து கொண்டுதான் இருக்கிறது. புதிதாக ஒரு சனாதனக் காவலர்கள் கிளம்பி இருக்கிறார்கள்.
ஒருவர் தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கிறார். இன்னொருவர் ஆந்திர மாநிலத்தில் துணை முதலமைச்சராக இருக்கிறார். 'சனாதனத்துக்கு எதிராகப் பேசுபவர்கள் அழிந்து போவார்கள்' என்று சாபம் இடுகிறார் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண். இந்தப் பூச்சாண்டிகளுக்கும் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி அவர்கள் பயப்படவில்லை. அதனையும் அலட்சியப்படுத்தி விட்டார். திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், “சனாதன தர்மத்தை அழிக்கப் போவதாகச் சிலர் சொல்கிறார்கள். உண்மையில்,சனாதனத்தை யார் அழிக்க நினைக்கிறார்களோ, அவர்கள்தான் அழிந்து போவார்கள்” என்று சொல்லி இருக்கிறார். இவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அழிப்பு வேலைகள்தானே தவிர, ஆக்க வேலைகள் அல்ல.
பவன் கல்யாணின் வழக்கமான நடிப்புகளில் ஒன்றுதான் இது. 'லட்டு மேட்டர் புட்டுக்கிச்சு'. எனவே, அதைத் திசை திருப்புவதற்காக இப்படிச் சொல்லி இருக்கிறார். 'கடவுளை உங்களது அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள்' என்று உச்சந்தலையில் ஓங்கிக் கொட்டி இருக்கிறது உச்சநீதிமன்றம். ஆந்திர மாநில அரசு அமைத்த விசாரணை ஆணையத்தை நிராகரித்திருக்கிறது உச்சநீதிமன்றம். இதற்காக தலை கவிழ்ந்து நிற்கிறார்கள் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபுவும், துணை முதலமைச்சர் பவன் கல்யாணும். கோடிக்கணக்கான லட்டுகளை, ஒரு நிமிடத்தில் மணியடித்து சுத்தமானதாக ஆக்கும் காமெடியையும் மக்கள் ரசிக்கவில்லை. இதுவும் பக்தர்களால் கிண்டலடிக்கப்பட்டு விட்டது. உடனே, 11 நாள் உண்ணாவிரதம் என்று பவன் கல்யாண் அறிவித்தார். கோவிலுக்கு பாதயாத்திரை போவதாகச் சொன்னார். கோவிலுக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்கப் போவதாகச் சொன்னார். களங்கம் ஏற்பட்டது கோவிலுக்கு அல்ல. இவர்களது அப்பட்டமான அசிங்க அரசியல்தான் அவமானப்பட்டு நிற்கிறது.
கோவிலுக்கு உள்ளே போகும்போது இன்னொரு சிக்கலை பவன் கல்யாண் எதிர்கொண்டார். அவரது மனைவி மாற்று மதத்தைச் சேர்ந்தவர். இந்து அல்லாத மாற்று மதத்தவர் கோவிலுக்குள் போனால் நம்பிக்கை பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். அவர்களுக்குப் பிறந்த மகளும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் கோவிலில் வழிபாடு செய்வதற்கு முன், தேவஸ்தான அலுவலகத்துக்குச் சென்று அது தொடர்பான பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டார். அவர் 13 வயதுக்கு உட்பட்டவர் என்பதால், பவன் கல்யாணும் தன் மகளின் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டார். இவை அனைத்தும் பா.ஜ.க.வின் வேஷ அரசியலுக்குப் பின்னால் இருக்கும் மர்மங்கள். புலியை விட புலி வேஷம் போடுபவர் அதிகமாக உறுமுவார் அல்லவா? அப்படித்தான் பவன் கல்யாணின் நடிப்புகள் அமைந்துள்ளன. பவன் கல்யாணின் முகத்திரை கிழிந்து தொங்கியது. இதில் இருந்து திசை திருப்ப திடீரென்று சனாதனக் காவலராக மாறினார் பவன் கல்யாண்.
பொய்களை நினைத்த உடன் அவிழ்த்துவிடுவது பவன் கல்யாணின் வழக்கம்தான். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், “தமிழ் சினிமாவில் தமிழக தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்க வேண்டும் என்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு (ஃபெஃப்சி) முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. இத்தகைய புது விதிகள் தமிழ் சினிமாவில் ஆர்.ஆர்.ஆர்.போன்ற படங்கள் உருவாவதைத் தடுக்கும்” என்று பவன் கல்யாண் சொன்னார். அப்படி எந்த விதிமுறையும் வகுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. நடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்கள் அதற்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்து விளக்கம் அளித்தார். ஆனாலும், தான் சொன்ன கருத்தை பவன் கல்யாண் திரும்பப் பெறவில்லை. இப்படி வாய்க்கு வந்தபடி பேசுவதுதான் அவரது வழக்கம்.
பாவம் ஆந்திர மக்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்கு வழி தெரியாத பவன் கல்யாண், சனாதனத்தைக் காக்கப் புறப்பட்டு விட்டார். அதற்கு முன்னால் எது சனாதனம் என்பதைச் சொல்லி விட்டுக் கிளம்புங்கள் என்பதுதான் நமது அன்பான வேண்டுகோள். பவன் கல்யாண் பெயர் மீடியாக்களில் அடிபட்டதும், நம்மூர் ரவி உடனடியாக அதற்குள் புகுந்தார். 'சனாதனம் என்றால் அனைவரும் ஒன்று என்று அர்த்தம்' என்கிறார். அப்படி எந்தப் புத்தகத்தில் இருக்கிறது என்பதுதான் நம்முடைய கேள்வி. ‘சனாதனம்’ என்றால் மாற்ற முடியாதது என்பதுதான் உண்மைச் சனாதனிகள் சொல்லும் விளக்கம். எதை மாற்ற முடியாது? உனது பிறப்பை, பிறப்பின் கடமையை மாற்ற முடியாது. பிறப்பு என்பது என்ன? ஜாதிதான் பிறப்பு ஆகும்.
* “நான்கு வர்ணங்களும் என்னால் உண்டாக்கப்பட்டவை. அவரவர்க்கு உரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதை மாற்றிச் செயல்பட வைக்கஅந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது” என்கிறது கீதை. எப்போதோ எழுதப்பட்ட கீதை மட்டுமல்ல, இப்போதும் எழுதப்படும் நூல்களும் அதைத்தான் சொல்கின்றன. ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தவே முற்பிறப்பு -- இப்பிறப்பு என்பதைஉருவாக்கினார்கள். முற்பிறப்பில் பாவம் செய்தாய் -- அதனால் இப்பிறவியில் இழிசாதியில் பிறந்தாய். அல்லது துன்பங்களை அனுபவிக்கிறாய். இதனைதான் கர்மா என்கிறார்கள்.
“கர்மா என்றால் நிரந்தரமானது. மாற்றமுடியாதது என்று பொருள். கர்மத்தை அடிப்படையாகக் கொண்ட தர்மமே சனாதன தர்மம்.” என்று அவர்களது புத்தகம்தான் சொல்கிறது. அகில உலக ஹரே கிருஷ்ணா இயக்கம் வெளியிட்ட 'கீதை உள்ளது உள்ளபடி' என்ற நூலில் பிரபு தாதா சொல்கிறார். Bhagavad gita as it is -- என்ற நூலில் இது இருக்கிறது. சனாதனத்தைப் பற்றி பேசுவதற்கு முன்னால், சனாதனம் குறித்த புத்தகத்தை ஒழுங்காக படியுங்கள். கர்மம் - தர்மம் என்பதெல்லாம் அவரவர் ஜாதி, குலத் தொழிலை நிரந்தரமாகச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். முன் வினையை யாராலும் மாற்ற முடியாது. ஒருவனின் பிறப்பு என்பது பூர்வ ஜென்ம வினைப்படி தான் அமையும். அந்தந்த பிறப்புக்கு ஏற்றபடி தான் அவரவர் ஜாதிக்கேற்ற தர்மத்தைச் செய்ய வேண்டும். மாற்றக் கூடாது. ஜாதித் தொழிலை மாற்றக் கூடாது. 'மாறாதது தான் சனாதனம்' என்பதுதான் உண்மைப் பொருள். எனவே, ரவி சொல்லும் விளக்கத்தை உண்மைச் சனாதனிகளும் ஏற்க மாட்டார்கள். இத்தகைய சனாதனத்தைக் காக்க வேண்டும் என்று பவன் கல்யாண் சொல்வதை நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.