ஈஷா யோகா மையத்தின் மீதான அனைத்துப் புகார்கள் மீதும் சங்பரிவார் அமைப்புகள் உள்ளிட்ட எவ்வித அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் உரிய புலன் விசாரணை செய்து அதன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவர், தனது இரு மகள்களும் ஈஷா மையத்தில் தங்கிக் கொண்டு, முதிய பெற்றோரைக் கைவிட்டிருப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். வெளிநாடுகள் சென்று பொறியியல் படிப்பு முடித்த அந்த இரு மகள்களும் தற்போது மொட்டையடித்துக் கொண்டு ஈஷா மையத்தில் துறவு வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் புகார் கூறியுள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் இந்த வாதத்தின் மீது மிகச் சரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
தனது மகளின் சொந்த வாழக்கையை ஆடம்பராகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கும் ஈஷா மையத்தை நடத்தும் ஜக்கி வாசுதேவ் மற்றவர்களின் குழந்தைகளை, பெண்களை பெற்றோரைக் கைவிட்டுத் துறவு வாழ்க்கை வாழ அறிவுறுத்துவது, மேலும், அந்த மையத்தில் பயிற்சி பெறக்கூடியவர்கள், வயது முதிர்ந்த பெற்றோரைக் கைவிடச் செய்வதை ஆகியவற்றை நீதிமன்றம் வலுவாக கண்டித்துள்ளது. சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு போக்சோ வழக்கை எதிர்கொள்ளும் மருத்துவர் உள்ளிட்டோர் ஈஷா மையத்தில் தங்கிச் செயல்படுவதை இந்த வழக்கு வெளிப்படுத்தியுள்ளது.
இது மட்டுமின்றி ஈஷா யோகா மையத்தின் மீது நில அபகரிப்பு, போதைப்பொருள் பயன்படுத்துவது, வளாகத்தில் நடைபெற்ற மர்மமான கொலைகள் என அடுக்கடுக்கான பல்வேறு புகார்கள் ஏற்கனவே பலரால் எழுப்பப்பட்டுள்ளன. இதன் மீதான வலுவான போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆட்கொணர்வு மனு மீதான சென்னை உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமானதாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் உள்ளது.
எனவே, ஈஷா யோகா மையத்தின் மீதான அனைத்துப் புகார்கள் மீதும் சங்பரிவார் அமைப்புகள் உள்ளிட்ட எவ்வித அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் உரிய புலன் விசாரணை செய்து அதன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, குற்றங்கள் மீதான பாரபட்சமற்ற சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் காவல்துறையும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” என்று கூறப்பட்டுள்ளது.