இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் நேரடி தாக்குதலை நடத்தியது. காசா மீது வான்வெளி தாக்குதல் மட்டுமின்றி தரைவழியாகவும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தற்போதுவரை 41 ஆயிரத்துக்கு அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஹமாஸின் கூட்டாளியான ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வடக்கு பகுதியில் இருந்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. அதற்கு பதிலடியாக இஸ்ரேலும் அவ்வப்போது ஹிஸ்புல்லா அமைப்பினர் இருக்கும் இடங்களில் வான்வெளித் தாக்குதலை நடத்தி வந்தது.
இந்த மோதலின் தொடக்கத்தில் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் மேல் அதீத கவனம் செலுத்தியதால் ஹிஸ்புல்லா அமைப்பின் மீது இஸ்ரேலால் போதிய கவனம் செலுத்தமுடியாத நிலை இருந்தது. தற்போது ஹமாஸ் அமைப்பினர் மையம் கொண்டுள்ள காசா மீதான தாக்குதல் ஏறத்தாழ முடிவுக்கு வரும் சூழலில் ஹிஸ்புல்லா அமைப்பு மேல் தனது முழு கவனத்தையும் இஸ்ரேல் செலுத்தியுள்ளது.
இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள எல்லை நாடான லெபனானில் இருந்து செயல்படும் அமைப்பான ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களை குறிவைத்து சமீபகாலமாக இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தி வந்தது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய படை தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார். அது மட்டுமின்றி ஹிஸ்புல்லா அமைப்பின் உச்சபட்ச தலைவரானா ஹசன் நஸ்ருல்லாவும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இது அந்த பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹசன் நஸ்ருல்லாவின் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இஸ்ரேல் மீது நேற்று பிரமாண்டமான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கிய விமானப்படைத் தளம் கடுமையாக சேதமடைந்திருப்பதாக ஈரான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த தாக்குதல் மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் என்று விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த நாடுகளின் வரலாற்றை அறியாதவர்களுக்கு இந்த தாக்குதலுக்கு சம்மந்தம் இல்லாத ஈரான் ஏன் இஸ்ரேலை தாக்குகிறது என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாகும். அதனை அறிந்து கொள்ள இந்த நாடுகளின் மத மற்றும் அரசியல் வரலாறுகளை அறிந்துகொள்ளவேண்டும்.
இஸ்லாமிய மதத்தின் உருவாக்கத்துக்கு பின்னர் அந்த மதம் ஷியா, சன்னி என இரண்டு பிரிவாக பிரிந்தது. தற்போதைய காலத்தில் உலகளவில் சன்னி பிரிவு இஸ்லாமை பின்பற்றுபவர்களே அதிகம். அதே போல அரபு நாடுகள் என்று அழைக்கப்படும் மத்திய கிழக்கு பகுதியிலும் சன்னி பிரிவு இஸ்லாமிய நாடுகளே அதிகம். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, யோர்தான் ஆகிய நாடுகள் சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடாக உள்ளது. அதே நேரம் அந்த பிராந்தியத்திலேயே ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடாக ஈரான் உள்ளது. இது தவிர ஈராக்கில் 55% மக்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். இதனால் அந்த நாட்டிலும் ஷியா பிரிவு சேர்ந்தவர்களிடமே ஆட்சி அதிகாரம் உள்ளது.
ஒரே மதம்தான் என்றாலும் ஷியா மற்றும் சன்னி பிரிவினர் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது தவிர்க்க இயலாததாக ஆகி வருகிறது. அதிலும் இரண்டு பிரிவினரும் குறிப்பிடத்தக்க அளவில் வசித்து வரும் யெமன், சிரியா போன்ற நாடுகளில் எந்த பிரிவினர் ஆட்சியை கைப்பற்றுவது என்பது குறித்து ஆயுத மோதலும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இதில் ஷியா பிரிவு போராளி குழுக்களுக்கு ஈரான் பல ஆண்டுகளாகவே ஆயுத உதவி செய்து வருகிறது. சிரியாவின் அதிபராக உள்ள பஷார் அல் அசார் ஷியா பிரிவை சேர்ந்தவராக உள்ளதால் அவருக்கு ஈரான் ஆதரவு கொடுத்து வருகிறது. அதே போல சிரியாவில் உள்ள சன்னி போராளி குழுக்களுக்கு சவுதி அரேபியா தலைமையிலான சன்னி நாடுகள் ஆதரவு அளிக்கிறது.
யெமன் நாட்டில் சன்னி பிரிவு அரசு ஆட்சியில் உள்ள நிலையில், அதற்கு சவுதி அரேபியா தலைமையிலான சன்னி நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது. அதே போல அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி போராளி குழுக்களுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. சிரியா மற்றும் யெமன் ஆகிய நாடுகளில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் தொடர்ந்து நடந்து வர இந்த மத அரசியலே முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
இது தவிர பல்வேறு நாடுகளில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஷியா பிரிவு போராளிகளுக்கு ஆதரவு அளித்து வருவதையும் ஈரான் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.
இதில் சவுதி அரேபிய தலைமையிலான பெரும்பாலான சன்னி இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவுக்கு நெருங்கிய கூட்டாளி நாடுகளாக உள்ளன. அதே நேரம் ஈரான் அமெரிக்காவுக்கு எதிரான நிலையை கடந்த சில தசாப்தங்களாக எடுத்துள்ளது. ஈரான் அமெரிக்காவுக்கு எதிரான நிலையை எடுக்க சவூதி அரேபியா மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் பனிப்போரும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் போக்கு உள்ளதால் அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ஆதரவு நாடான இஸ்ரேலும் ஈரானும் தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது.
இதன் காரணமாகவே சன்னி அமைப்பாகவே இருந்தாலும் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடும் ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆயுத உதவி மட்டுமின்றி பொருளாதார உதவியும் ஈரான் செய்து வந்தது. இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸ் பயன்படுத்திய ஏவுகணைகள் ஈரானால் வழங்கப்பட்டது என்றும் குற்றச்சாட்டு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தாக்குதலின்போது ஈரானின் செயல்பாடுகள் ஈரானின் ஆதரவாளர்களாலேயே விமர்சிக்கப்பட்டன. காசாவை இஸ்ரேல் தரைவழியாக தாக்கத்தொடங்கிய போது, ஈரான் இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஈரான் இஸ்ரேல் மீது சிறிய அளவிலான தாக்குதலை கூட முன்னெடுக்கவில்லை.
அதே போல, ஈரான் மண்ணில் வைத்து ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே இஸ்ரேலால் கொல்லப்பட்டபோது கூட ஈரானின் பதிலடி பெரிய அளவில் இருக்கவில்லை. இஸ்ரேல் மீது சிறிய அளவிலான ஏவுகணை தாக்குதல் மட்டுமே நடத்தப்பட்டது. அதுவும் இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பால் முறியடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காசா மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தனது கவனத்தை செலுத்திய இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர்களை வெடிக்கவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான ஹிஸ்புல்லா அமைப்பினர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் உச்சபட்ச தலைவரான ஹசன் நஸ்ருல்லா கொல்லப்பட்டார். அதோடு அவருடன் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டனர். அதோடு நிற்காத இஸ்ரேல் லெபனான் மீது தரைவழி தாக்குதலையும் மேற்கொண்டது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அது ஈரானின் கூட்டாளிகளான ஷியா இயக்கத்தவர் மத்தியிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஈரான் முக்கியமான கட்டத்தில் அதனை நம்பி இருக்கும் போராளிகளை கைவிட்டு விடும் என்று லெபனானிலும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கட்டாயம் ஏதும் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைக்கு ஈரான் தள்ளப்பட்டது. இந்த காரணத்தால்தான் இஸ்ரேல் மீது ஈரான் நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த முறை போல அல்லாமல் இந்த முறை 180க்கும் அதிகமான ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலின் முக்கிய இலக்குகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. எனினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் உளவுத்துறை முன்பே அறிந்துகொண்டதால் பெரும்பாலான இஸ்ரேலிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். ஈரானின் இந்த தாக்குதல் இஸ்ரேலின் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்றே அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலுடன் நேரடி போரை தவிர்க்கவே இஸ்ரேல் மேல் ஈரான் இதுவரை பெரிய அளவிலான தாக்குதலை நடத்தாமல் இருந்தது. ஒரு வேலை இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் என்றால் அது மிகப்பெரிய பாதிப்பை இரு நாடுகளுக்கும் ஏற்படுத்தும். இரு நாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்ளாத நிலையில், இந்த நாடுகளுக்கு இடையே ஏற்படும் போரில் ஏவுகணைகள் மட்டும் போர் விமானங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தற்போதுவரை இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கின்றன. இதனால் வான்பாதுகாப்பு மற்றும் அதிநவீன விமானங்களை கொண்டுள்ள இஸ்ரேல் ஈரானை விட வான்பரப்பில் வலிமையான நாடாக திகழ்கிறது. இதுவும் ஈரானின் தயக்கத்துக்கு காரணமாகவும் பார்க்கப்படுகிறது
சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக இருந்தாலும் பகிரங்கமாக ஈரானை அந்த நாடுகள் ஆதரிக்கவில்லை. எனினும், இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே போர் மூண்டால் அதில் நிச்சயம் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கும். அதே மறுபுறம் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் நிலையும் ஏற்படலாம். இதன் காரணமாகவே இஸ்ரேல் - ஈரான் மோதல் மூன்றாம் உலகப்போராக மாற வாய்ப்பிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. தற்போது கூட ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் ஈரானின் வலிமையில் ஒரு சிறிய பகுதிதான். ஆனால் இதற்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுத்தால் இதனை விட பெரிய தாக்குதலை ஈரான் மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.
எனினும் இரண்டு நாடுகளுமே பரஸ்பரம் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தாது என்றே ராணுவ நிபுணர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்னர் இஸ்ரேல் - ஈரான் இடையே இதைவிட பெரிய அளவிலான பதற்றம் ஏற்பட்டபோதுகூட இரு நாடுகளும் நேரடி போரில் ஈடுபடவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் இந்த நாடுகள் போரில் இறங்கினால் அது ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்குமே பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகம் தற்போது மத்திய கிழக்கு நாடுகளை நம்பியே உள்ளது. இந்த சூழலில் அங்கு ஒரு போர் நடக்க உலக நாடுகளே விரும்பமாட்டார்கள் என்பதுதான் மூன்றாம் உலகப் போர் வராது என்பதற்கான ஒரு நம்பிக்கை.